விவசாயிகளை மு.க.ஸ்டாலின் கேவலப்படுத்துகிறார் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண விழாவில், விவசாயிகளை ஸ்டாலின் கொச்சைப்படுத்த வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும் மாநிலங்களவை எம்.பி-யுமான வைத்திலிங்கத்தின் மகன் திருமண விழா தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்தத் திருமண விழாவில், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

பின்னர் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், “டெல்டா மாவட்ட பகுதிகளை பாதுக்காக்கபட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு தமிழக முதல்வருக்கு விவசாயிகளின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஒட்டு மொத்த டெல்டா மாவட்ட விவசாயிகளின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் ஆட்சியாக அ.தி.மு.க ஆட்சி உள்ளது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக ஒரு விவசாயி முதல்வராகப் பதவி ஏற்றதுடன், வெற்றிகரமான ஆட்சியையும் நடத்திவருகிறார்” என்றார்.

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில்,

  • தஞ்சைத் தரணி மீது ஜெயலலிதா எவ்வளவு பற்றும் பாசமும் கொண்டிருந்தார் என்பது இங்குள்ள விவசாயிகளுக்குத் தெரியும்.
  • காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை, சட்டப் போராட்டங்கள் நடத்தி மத்திய அரசிதழில் வெளியிடவைத்தவர் அவர்.
  • இதற்காக தஞ்சாவூரில் பாராட்டு விழா நடத்தியபோது, என்னுடைய 33 ஆண்டு கால அரசியல் வாழ்கையில் இதுபோன்ற ஒரு மகிழ்ச்சியான நாள் இருக்க முடியாது என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
  • தஞ்சை மாவட்டம் ஒரு புண்ணிய பூமி, இதற்கு அச்சுறுத்தலாக ஹைட்ரோ கார்பன் திட்டம் இருந்துவந்தது.
  • மக்களின் அச்சத்தைப் போக்கவும், இந்தப் பகுதியைக் காக்கவும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, வரலாற்றில் பதிவுசெய்திருக்கிறோம் என்றார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,

  • கிளைச் செயலாளர் தொடங்கி படிப்படியாக வளர்ச்சியடைந்தவர் வைத்திலிங்கம்.
  • அவர், அ.தி.மு.க-வுக்கு தூணாக இருந்து வருகிறார்.
  • எதை நினைத்தாலும் அதைச் சாதிக்க நினைப்பவர்.
  • மனதில் பட்டதை ஜெயலலிதாவிடமே பயம் இல்லாமல் சொல்வார்.
  • ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், விவசாயிகளின் பிள்ளைகள் உயர் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பகுதியில் பொறியியல், வேளாண், கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றைக் கொண்டுவந்தார்.

ஒரு விவசாயி தமிழகத்தின் முதலமைச்சராக இருக்க கூடிய இந்த சூழ்நிலையில், அவர்களுக்குத் தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

வாழ்கையில் எல்லோருக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும்; எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வந்தது.

உங்களால் நான் முதல்வராக ஆனேன்.

ஆனால், அதை பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின், என்னைப் பற்றி நாள்தோறும் பேசி வருகிறார்.

நான் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யத் தேவையில்லை. அவரே என்னை விளம்பரப்படுத்துகிறார்.

ஸ்டாலினுக்கு விவசாயி என்றாலே என்ன எரிச்சல் என்று தெரியவில்லை. நான் விவசாயி என்று சொன்னால், நீ விவசாயி இல்லை என்று கூறுகிறார். ஏன், என்ன கோபம் என்று தெரியவில்லை.

என்னுடைய குடும்பம், கிராமத்தில் வசிக்கும் விவசாயக் குடும்பம். அப்போது, விவசாயி என்றுதானே சொல்ல வேண்டும். ஆனால், ஸ்டாலினுக்கு அது பிடிக்கவில்லை.

விவசாயி என்றாலே ஒரு பெருமையான விஷயம். அடுத்தவரிடம் கையேந்தாதவர்கள் விவசாயிகள்.

மற்றவர்களெல்லாம் மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டும். விவசாயிகள் மட்டும்தான் சொந்தக்காலில் நிற்பார்கள்.

அடுத்தவரிடம் கையேந்தாத கூட்டம் அவர்கள் மட்டுமே. நான் ஒரு விவசாயி. சொந்தக் காலில் நிற்கும் விவசாயிகளை எதிர்த்துப் போராடி ஸ்டாலினால் வெல்ல முடியாது.

இரவு பகல் பாராமல், வெயில், மழை பாராமல் உழைப்பவர்கள் விவசாயிகள். அவர்களை ஸ்டாலின் கொச்சைப்படுத்த வேண்டாம்.

பச்சைத்துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயி இல்லை என்கிறார் ஸ்டாலின்.

பச்சைத்துண்டு போடுவதற்கும் விவசாயி எனச் சொல்வதற்கும் ஒரு தகுதி வேண்டும் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே