அ.தி.மு.க கொடிக்கம்பம் சரிந்து விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு நிவாரண நிதி வழங்கிய மு.க.ஸ்டாலின்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அ.தி.மு.க கொடிக்கம்பம் சரிந்து விபத்துக்குள்ளாகி கால்களை இழந்த அனுராதாவின் குடும்பத்துக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் 5 லட்ச ரூபாய் நிவாரண நிதி அளித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூரை சேர்ந்தவர் அனுராதா ராஜேஸ்வரி பட்டப்படிப்பை முடித்த இவர், தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் கடந்த 11-ம் தேதி அவரது அலுவலகத்திற்கு செல்ல இருசக்கர வாகனத்தில் விமான நிலைய சந்திப்பில் இருந்து நீலாம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது கோல்டுவின்ஸ் அருகே சென்ற போது, சாலையோரம் வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிக் கம்பம் கீழே சாய்ந்தது.

அதனால் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார்.

அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியது.

அதனால் அவருடைய இரண்டு கால்களும் நசுங்கின. பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரி என்ற அனுராதாவின் பெற்றோரை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அனுராதா குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய்க்கான காசோலையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடியில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது தெரியாது என்று எப்படிச் சொன்னாரோ?

அதேபோன்று அனுராதா விபத்தில் சிக்கிய சம்பவமும் தெரியாது என்று அலட்சியமாக பதில் கூறியது வேடிக்கையாக உள்ளது. வெட்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

அனுராதா விபத்தில் சிக்கியது தொடர்பாக லாரி ஓட்டுநர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

கொடி கட்டியவர்கள், விழா நடத்தியவர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு தி.மு.க துணை நிற்கும் என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே