விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுவிப்பு.!

அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் இருந்து அதிமுகவின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டிருப்பது அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலருக்கு பெரும் வியப்பை அளித்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அமைச்சர் மணிகண்டனை தவிர வேறு யார் மீது ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகிய இருவரும் பெரியளவில் நடவடிக்கை எடுத்ததாக வரலாறு இல்லை.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து முதல்முறையாக கட்சியின் மாவட்டச் செயலாளர் ஒருவரை, அதுவும் அமைச்சராக இருப்பவரிடம் இருந்து அதிரடியாக கட்சி பதவியை பறித்துள்ளது அதிமுக தலைமை.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள குருந்தமடம் என்ற குக்கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர், பள்ளிகாலத்திலேயே எம்.ஜி.ஆரின்.தீவிர ரசிகர் என்பதால் அவர் நடிப்பில் வெளியாகும் படங்களை ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவார்.

மேலும், எம்.ஜி.ஆர். திரைப்பட போஸ்டர்களை தாமே சுவர்களில் ஒட்டி தனது தலைவன் புகழை பரப்பியுள்ளார்.

அதிமுகவில் சாதாரண அடிப்படை உறுப்பினராக பதிவு செய்து கொண்ட இவர், திருத்தங்கள் பஞ்சாயத்து துணைத் தலைவராக 1996-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருத்தங்கல் நகராட்சியாக மாற்றப்பட்டதை அடுத்து நகராட்சி துணைத்தலைவராக இருந்த இவருக்கு எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்ற கனவு எட்டிப்பார்த்தது.

இதனால் அப்போதைய மாவட்டச்செயலாளர்கள் பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் போன்றோரின் குட்புக்கில் இடம் பிடித்து கட்சியில் படிப்படியாக வளர்ச்சியடைந்து, விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஆனார்.

இளம் வயது முதலே துடுக்காக பேசுவது ராஜேந்திரபாலாஜியின் வழக்கம்.

கருணாநிதியையும், திமுகவையும் அதிமுக மேடைகளில் இவர் விமர்சித்த தொணிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

ராஜேந்திரன் என்ற பெயரை நியூமராலஜி படி ராஜேந்திரபாலாஜி என பெயரை மாற்றிக்கொண்டு அந்த பெயரிலேயே சிவகாசி தொகுதிக்கு சீட் கேட்டு கடந்த 2011-ல் விண்ணப்பம் செய்தார்.

அதிர்ஷடக்காற்றும், சசிகலாவின் பரிபூரண பரிந்துரையும் அவருக்கு எம்.எல்.ஏ சீட் பெற்றுக்கொடுத்து அமைச்சராகவும் ஆக்கியது. இதுமட்டுமல்லாமல் மாவட்டச் செயலாளர் பதவியையும் கூடவே பரிசாக கொடுத்தார் ஜெயலலிதா.

அன்றிருந்து இன்று வரை சுமார் 10 ஆண்டுகாலம் விருதுநகர் மாவட்டச் செயலாளராக இருந்து வந்த ராஜேந்திரபாலாஜியின் கட்சி பதவி இன்று பறிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை ராஜேந்திரபாலாஜி என்ற அமைச்சர் இருக்கிறாரா என்பதே தமிழக மக்களில் பெரும்பாலானோருக்கு தெரியாது. அப்படியிருந்த இவர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தனது சடு குடு ஆட்டத்தை தொடங்கினார்.

சசிகலாவின் போஸ்டரை ஒருவர் கிழித்தார் என்பதற்காக, தாம் வகிக்கும் அமைச்சர் பதவியை கூட மறந்து அந்த நபரை தாக்கினார். அப்போது அந்த வீடியோ பூதாகரமாக வெடித்தது.

அதைத்தொடர்ந்து டிரம்பே வந்தாலும் தங்களுக்கு பயம் இல்லை என்றும், மோடி இருக்கிறார் பார்த்துக்கொள்வார் என்றும், எல்லாம் மேலே இருப்பவர் பார்த்துக்கொள்வார் எனவும் கூறி அடுத்த சர்ச்சையில் சிக்கினார்.

நாங்குநேரி இடைத்தேர்தலின் போது தன்னை சந்திக்க வந்த இஸ்லாமியர்களிடம், நீங்க தான் எங்களுக்கு ஓட்டு போட மாட்டீர்களே பிறகு எதற்கு என்னை பார்க்க வந்தீர்கள் எனக் கேட்டு அவர்களை விரட்டியடித்தது பெரும் சர்ச்சையானது.

இதுமட்டுமல்லாமல் அண்மையில் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய மத விவகாரங்கள் பற்றி பேசியிருந்தார்.

இதனால் அரசுக்கும், அதிமுக தலைமைக்கு பெரும் தலைவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அழைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பினார்.

ஆனால் நீங்க என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்பதற்கேற்ப திரும்ப திரும்ப சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வந்தார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

அண்மையில் செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற முதல்வர் எடப்பாடி, செய்தியாளர்கள் நமக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுக்கும் நிலையில் இவர் எதற்கு இந்த வேலையில் ஈடுபட்டார் என ருத்ரதாண்டவம் ஆடி இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆனாலும் கொரோனா விவகாரத்தில் மதத்தை மையமாக வைத்து ராஜேந்திரபாலாஜி டிவீட்டரில் போட்ட பதிவு ஒரு சில விநாடிகளில் முதல்வர் கவனத்துக்கு சென்றுள்ளது.

இதனால் இது குறித்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகிய இருவரும் உடனடியாக கலந்துபேசி நடவடிக்கை எடுப்பது என முடிவெடுத்தனர்.

அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது என்பது தான் முதலில் எடுக்கப்பட்ட முடிவு என கூறப்படுகிறது.

பின்னர் ஒரு சில சீனியர் நிர்வாகிகள் அறிவுறுத்தல் பேரில் முதற்கட்டமாக கட்சிப்பதவியான மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா கொடுத்த பதவியில் பத்தாண்டுகளாக இருந்து வந்த ராஜேந்திரபாலாஜி சர்ச்சை கருத்துக்களால் பரிதாபமாக பறிகொடுத்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே