டெங்கு உள்ளிட்டவை ஏற்படாமல் தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்! – கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் டெங்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடந்த கலெக்டர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “தற்போது, பருவமழை காலம் தொடங்க உள்ளது.

பருவ காலம் ஆரம்பிக்கும் முன்னதாகவே நகர்ப்புர/ஊரக பகுதிகளில் குடிநீர், சாலை வசதி, திடக்கழிவு

மேலாண்மை போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி, பருவ கால சவால்களை திறம்பட கையாள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

நாம் முன்னரே திட்டமிட்டு நீர்நிலைகளைத் தூர் வாரியது, ஆழப்படுத்தியது, வாய்க்கால்களை சீரமைத்தது போன்ற பணிகளினால், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு 4 லட்சத்து 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை வேளாண் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

கடந்த நான்கு ஆண்டுகளில் குடிமராமத்து திட்டத்தின் மூலமாக, 1,433 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6,278 நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

போதிய அளவில் வேளாண் இடுபொருட்கள் இருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியுள்ளார்கள்.

எனவே, வேளாண் மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து, வரலாறு காணாத அளவிற்கு இந்தாண்டு வேளாண் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், பருவ மழைக்கு முன்னதாகவே நீர்நிலை உட்கட்டமைப்புகளான கால்வாய்கள், அணைக்கட்டுகளின் கதவுகள், மற்றும் கரைகளைக் கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. விரைவில் பருவமழையும் துவங்க உள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்காமல் இருக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மழைநீர் வடிகால் பகுதிகளைத் தூய்மைப்படுத்தி, மழைநீர் வடிந்து செல்ல தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இல்லை என்றால், டெங்கு கொசு உருவாக வாய்ப்பு ஏற்படும். டெங்கு போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுப்பதற்கு உகந்த நேரம் இதுதான்.

வரலாற்று சாதனையாக தமிழக அரசு 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று மிகக் குறுகிய காலத்திலேயே அவற்றிற்கான கட்டுமானப்
பணிகளைத் துவக்கி உள்ளது.

அப்பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் கள ஆய்வு செய்து, பணியினை மேலும் துரிதப்படுத்த வேண்டும். அரசின் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்கி வரும்

பொதுமக்களுக்கும், செம்மையான முறையில் பணியாற்றி வருகின்ற அனைத்து அரசு அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றிகளை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொது மக்களின் நலன் கருதி, உங்கள் அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொது மக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே