பசிப் பட்டினியால் வாடும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொருளாதாரத் திட்டத்தில் ஒன்றுமில்லை : ப.சிதம்பரம்

லட்சக்கணக்கான ஏழைகளுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் மத்திய நிதியமைச்சர் அறிவித்த பொருளாதார தொகுப்புத் திட்டத்தில் ஒன்றுமில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ரூ.20 கோடி மதிப்பிலான பொருளாதாரத் திட்டங்களை அறிவித்தார்.

அதில் முதல் கட்டமாக ரூ.6 லட்சம் கோடிக்கான பொருளதாரத் திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு குறித்து முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஊடகங்களுக்கக் காணொலி மூலம் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

”மத்திய அரசு ரூ.3.6 லட்சம் கோடிக்குப் பிணையில்லாத கடனை சிறு தொழில்களுக்கும், வர்த்தகத்துக்கும் அறிவித்துள்ளது.

அப்படியென்றால் மீதமுள்ள ரூ.16.4 லட்சம் கோடி எங்கே?

சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான பொருளாதாரத் திட்டம் தவிர்த்து இன்றைய (நேற்று) அறிவிப்புகள் அனைத்தும் ஏமாற்றம் அளிக்கிறது.

நடுத்தரக் குடும்பத்து மக்களுக்கும்,ஏழைகளுக்கும் இந்த அறிவிப்புகளில் ஒன்றுமில்லை.

இந்த அறிவிப்புகளால் தேவை, நுகர்வு தூண்டப்படும் என்பதில் எனக்குத் தெரியவில்லை.

பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர்கள் சட்டத்தை தவறான நேரத்தில் திருத்தியிருக்கிறார்கள். இது தவறான முன்னுதாரணத்தை உண்டாக்கும்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்காக திட்டங்களை அறிவித்தாலும் இது 45 லட்சம் மிகப்பெரிய நிறுவனங்களுக்குத்தான் பயனுள்ளதாக இருக்கிறது.

நாட்டில் உள்ள 6.3 கோடி சிறு, நடுத்தர நிறுவனங்கள் கண்டுகொள்ளப்படவில்லை. அதேசமயம் ரூ.20 ஆயிரம் கோடிக்கான கடன் மீட்புத் திட்டத்தை வரவேற்கின்றேன்.

ரூ.3.6 லட்சம் கோடிக்கு கடன் மீட்புத் திட்டம் என்றால் மீதமுள்ள ரூ.16.4 லட்சம் கோடி எங்கே? மத்திய அரசு தனது சொந்த அறியாமை, அச்சத்தில் சிறைபட்டுள்ளது.

மத்திய அரசு அதிகமாக செலவிட வேண்டும். ஆனால், அதையும் மத்திய அரசு செய்யத் தயாரில்லை.

அதிகமாக கடன் வாங்க வேண்டும், அதையும் செய்ய மத்திய அரசு தயாரில்லை. மாநிலங்களை அதிகமாக கடன் பெற அனுமதிக்க வேண்டும், அதையும் செய்யத் தயாரில்லை.

முதலில் அடிமட்டத்தில் உள்ள 13 கோடி குடும்பங்களின் கைகளில் பணத்தைக் கொடுக்க வேண்டும். ஒரு குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.65 ஆயிரம் கோடிதான் செலவாகும்.

லட்சக்கணக்கான ஏழைகள், பசியோடும், விரக்தியோடும் உள்ளனர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடந்து சொந்த ஊர் சென்று கொண்டிருக்க, அவர்களுக்கு மத்திய நிதியமைச்சர் அறிவிப்பில் ஏதுமில்லை.

உழைக்கும் மக்கள் ஒவ்வொரு நாளும் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.

பிரான்ஸ் பொருளதார வல்லுநர் தாமஸ் பிக்கெட்டி, லாக்டவுனில் ஏழைகளுக்குப் பணத்தை நேரடியாக வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்று ஆலோசனை தெரிவித்தார்.

ஆனால் நமது பிரதமர் மோடி, உயிரையும், வாழ்வாதாரத்தையும் பற்றிப் பேசுகிறார். இரண்டுக்கும் முரணில்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.

நம்முடைய வாழ்வைக் காக்க வேண்டும். ஆனால், லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வலுக்கட்டாயமாகத் தள்ளப்படுகிறார்கள்.

துறைரீதியாக இருக்கும் பிரச்சினைகளை மத்திய அரசு கண்டறிந்து நிதியுதவி அறிவிக்க வேண்டும்.

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார மீட்புத் திட்டங்கள் எதிர்பார்க்கப்பட்டவை என்றாலும் நாளேடுகளின் தலையங்கத்தை மட்டுமே நிரப்புகின்றன.

ஆனால் வெறுமையாக இருக்கிறது. 4-வது கட்ட லாக்டவுன் வேறு வடிவத்தில் தொடர்ந்தாலும், பரந்த வரையறைகளை மத்திய அரசால் அறிவிக்கப்பட்டாலும் மற்றவை மாநிலங்களாலேயே செயல்படுத்த உள்ளன.

ஆனால், வாழ்க்கையும் பொருளாதாரமும் தொடங்கப்பட வேண்டும்”.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே