மேலூர் அமமுக பிரமுகர் கொலை… கிராம மக்கள் தீர்மானம்…!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அமமுக பிரமுகர் கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர்களின் குடும்பத்தை ஒதுக்கி வைக்க 52 கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த வல்லாளப்பட்டி கூட்டுறவு சங்க முன்னாள் தலைவராக இருந்தவர் அசோகன். இவர் அதிமுகவில் இருந்து விலகி, அமமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார்.

வல்லாளப்பட்டி பேரூராட்சியின் அமமுக செயலாளராக இருந்த உமாபதி, கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்தார்.

இதனால், 3 நாட்களுக்கு முன்பு வல்லாளப்பட்டி பேரூராட்சி அமமுக பொறுப்பாளராக அசோகன் அக்கட்சியின் தலைமை நியமித்தது.

பதவி கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்த அசோகன், வழக்கம்போல் தனது நண்பர்களுடன் காலை நடைப்பயிற்சிக்கு சென்றார்.

செட்டிப்பட்டி அருகே தனது நண்பர்களுடன் கட்சி விவகாரம் குறித்து பேசிக் கொண்டே நடைப்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு கும்பல், அசோகனை சுற்றிவளைத்து, அரிவாளால் வெட்டத் தொடங்கியுள்ளது.

கும்பலை தடுக்க, அசோகனின் நண்பர்கள் முயன்றுள்ளனர். அப்போது ஆயுதங்களைக்காட்டி மிரட்டியதால், அவர்கள் தப்பியோடியுள்ளனர்.

மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியதால் படுகாயமடைந்த அசோகன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், அமமுக நிர்வாகி அசோகனின் உடலைக் கைப்பற்றி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

அசோகனின் கொலையை கண்டித்து மேலூர் பேருந்துநிலையம் முன்பு, அமமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார்,
உமாபதி, அடப்பு முருகேசன், மதுரை யாகப்பா நகர் பன்னீர்செல்வம், மதுரை செல்லூர் செல்வம் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.

கட்சியில் ஆள்சேர்க்கும் தகராறு காரணமாக அவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், அசோகன் படுகொலை தொடர்பாக வல்லாளப்பட்டி உள்ளிட்ட 52 கிராம மக்கள் ஒன்று கூடி கிராம கூட்டம் நடத்தினர்.

அதில்,

  • கைதானவர்களின் குடும்பத்தினருடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும்,
  • குற்றவாளிகளுக்கு யாரும் ஜாமின் வழங்கக்கூடாது,
  • 52 கிராமங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அவர்களுக்கு சாதகமாக வழக்கில் ஆஜராகக்கூடாது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
  • மேலும் குற்றவாளிகளுக்கு வேறு வழக்கறிஞர்கள் ஆஜராகாதவாறு மேலூர் வழக்கறிஞர்கள் சங்கத்திடம் வலியுறுத்தியும்,
  • விரைவாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தும்,
  • இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் நடக்காமல் இருக்க முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே