மேகன் வெளியிட்ட நிறவெறி தொடர்பான குற்றச்சாட்டு கவலை அளிக்கிறது – இங்கிலாந்து அரசி அறிக்கை..!!

இங்கிலாந்து இளவரசர் பட்டத்தைத் துறந்த ஹாரியின் மனைவி மேகன் மார்கல் அரச குடும்பத்தின் மீது முன்வைத்த நிறவெறி குற்றச்சாட்டு உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கடந்த சில ஆண்டுகளாக ஹாரி, மேகன் எதிர்கொண்ட சவால்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

சமீபத்திய பேட்டியில் எழுப்பப்பட்ட புகார்கள், குறிப்பாக அரச குடும்பத்தின் மீதான நிறவெறி புகார் வருத்தமளிக்கிறது.

சில புகார்களின் மீது மாற்றுக் கருத்து இருந்தாலும், பொதுவெளியில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அந்த குடும்பரீதியாக தனிப்பட்ட முறையில் சீர் செய்யப்படும்.ஹாரி, மேகன், ஆர்ச்சி எப்போதுமே குடும்பத்துக்கு பிரியமானவர்களாக இருப்பர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் பட்டத்தைத் துறந்த ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் ஆகிய இருவரும் இங்கிலாந்து அரச குடும்பப் பதவிகளிலிருந்து விலகுவதாகக் கடந்த ஆண்டு அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அரச குடும்பத்தினருடன் ஆலோசனை நடந்தது. அவர்களின் முடிவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கினார்.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் மார்கல் இனிமேல் ஒருபோதும் பெருமைக்குரிய இளவரசர், இளவரசி பட்டங்களைப் பயன்படுத்த மாட்டார்கள்.

மக்களின் வரிப் பணத்தையும் பெற மாட்டார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.

ஹாரி – மேகன் மார்கல் அரச குடும்பத்திலிருந்து விலகியது குறித்துப் பல்வேறான கட்டுரைகளை பிரிட்டன் பத்திரிகைகள் வெளியிட்டு வந்தன.

இவற்றுக்கெல்லாம் எந்தவித பதிலையும் தெரிவிக்காமல் ஹாரியும் மேகன் மார்கலும் மவுனம் காத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக ஹாரியும், மேகனும் கனடா மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்தனர். இந்த நிலையில் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரேவின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருவரும் மனம் திறந்து பேசியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்டது.

அதில் பேசிய ஆப்பிரிக்க அமெரிக்கரான மேகன் மார்கல், ”நான் கர்ப்பமாக இருந்த காலங்களில் என் மகன் பிறந்த பிறகு எவ்வளவு கருப்பாக இருப்பானோ என்று அரச குடும்பத்தினர் கவலைப்பட்டனர். ‘அவனுக்குப் பாதுகாப்பு வழங்கப்படாது, அவனுக்கு இளவரசர் பட்டம் சூட்டப்படாது’ என்றெல்லாம் பேச்சுகள் எழுந்தன.

நிறைய முறை இனி உயிர் வாழக் கூடாது என்று நினைத்திருக்கிறேன் ” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

1990களில் டயானா வெளியிட்ட அதே ஆதங்கம் மேகன் மார்கல் குரலில் ஒலித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து வருவகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே