இந்தியாவின் சேட்டிலைட் மேன்-க்கு கெளரவம் அளித்த Google Doodle..!!

முக்கிய நாள்கள், வரலாற்றில் நீங்கா இடம்பெற்றவர்களின் பிறந்த நாள்கள் மற்றும் நினைவு நாள்கள் வரும்போது கூகுள் எப்போதும் தன் முகப்புப் பக்கத்தில் அவர்கள் தொடர்பான டூடூல் ஒன்றை வைத்து மரியாதை செலுத்தும். அப்படி இன்று (10-03-2021), இந்தியாவின் மூத்த விஞ்ஞானி உடுப்பி ராமச்சந்திர ராவை நினைவுகூர்ந்துள்ளது. இன்று அவரின் 89-வது பிறந்தநாள்.

யார் இந்த ராமச்சந்திர ராவ்?

உடுப்பி ராமச்சந்திர ராவ், இஸ்ரோவின் முன்னாள் தலைவர். அரசின் உயரிய பத்ம விருதுகளான பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளைப் பெற்றுள்ளார்.

1984 முதல் 1994வரை இஸ்ரோவை வழிநடத்திச் சென்றவர் இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியப்பட்டாவை ஏவுவதற்கு முக்கிய பங்காற்றினார்.

கர்நாடகாவின் ஒரு குக்கிராமத்தில் 1932-ம் ஆண்டு பிறந்தவர், காஸ்மிக் கதிர் (அண்டக் கதிர்) பற்றி ஆராய்ச்சி செய்யும் இயற்பியலாளராக தன் பணியைத் தொடங்கினார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சிகளின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர்.விக்ரம் சாராபாயின் வழிகாட்டலில் பணியாற்றிய ராமச்சந்திர ராவ், முனைவர் பட்டம் பெற்ற பிறகு, நாசாவிலும் பணியாற்றினார்.

உடுப்பி ராமச்சந்திர ராவ்
உடுப்பி ராமச்சந்திர ராவ்

இந்தியாவிற்கு 1966-ம் ஆண்டு திரும்பியவர், அகமதாபாத்தில் இயங்கிவரும் விண்வெளி தொடர்பான படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனம் ஒன்றில் வானியல் தொடர்பான படிப்பொன்றைத் துவங்கி வைத்தார்.

1972-ம் ஆண்டு முதல் இந்தியாவின் செயற்கைக் கோள் தொடர்பான ஆராய்ச்சிகளில் பங்கெடுத்தவர், 1975-ம் ஆண்டு இந்தியா ஏவிய முதல் செயற்கைக்கோளான ஆரியப்பட்டாவின் வெற்றியில் பெரும் பங்காற்றினார்.

அதன் பின்னர் 1984-94வரை இஸ்ரோவின் தலைவராக தன் பணியைத் திறம்படச் செய்தார்.

2017-ம் ஆண்டு மறைந்த இவருக்கு இன்று பிறந்த நாள். அவரை நினைவுகூரும் வகையில் கூகுள் தன் டூடூலை வைத்து அவருக்கு மரியாதை செய்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே