வடகிழக்கு பருவ மழையின் போது உயிர் இழப்பு, பொருள் இழப்பு ஏற்படாமல் தடுக்கும் விதமாக அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருவதாக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருக்கிறார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து முதலமைச்சர் தலைமையில் 2 ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வெள்ளம் வரும் முன், வெள்ளம் ஏற்பட்ட போது, வெள்ளம் ஏற்பட்ட பின்பு என 3 காலங்களிலும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை வழங்கி உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.