மீண்டும் பரவத் தொடங்கியுள்ள கொரோனா வைரஸ்: அடுத்த 3 டி20 போட்டிகளுக்கு அகமதாபாதில் பார்வையாளர்களுக்கு தடை

கொரோனா வைரஸ் அல்லது கோவிட் 19 கேஸ்கள் அதிகரிப்பதால் அகமதாபாத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் அடுத்த 3 டி20 போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அல்லது கோவிட் 19 கேஸ்கள் அதிகரிப்பதால் அகமதாபாத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் அடுத்த 3 டி20 போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மார்ச் 16, 18 மற்றும் 20-ம் தேதிகளில் மீதமுள்ள 3 டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. இவை காலி ஸ்டேடியத்தில் தான் நடக்கும் என்று குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

“கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஆகவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் ஆலோசித்து அடுத்த 3 போட்டிகளுக்கும் ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.” என்றி குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.

இங்கு நடந்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கும் முதலிரண்டு டி20 போட்டிகளுக்கும் 50% ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் இப்போது கோவிட் 19 பெருகி வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இந்தியாவில் புதிதாக கடந்த 24 மணி நேரத்தில் 24,492 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.14 கோடியாக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2, 23,432 ஆக அதிகரித்துள்ளது. மீளுவோர் விகிதம் மேலும் குறைந்து 96.25% ஆக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகமே தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பலியானோர் எண்ணிக்கை 131 ஆக அதிகரிக்க மொத்த பலி எண்ணிக்கை 1,58,856 ஆக உள்ளது. 131 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்குப் பலியானதில் மகாராஷ்டிராவில் அதிகமாக 48 பேரும், பஞ்சாபில் 27 பேரும், கேரளாவில் 11 பேரும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் அகமதாபாத்தில் டி20 போட்டிகளுக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற 2வது போட்டியில் இஷான் கிஷன் ஹீரோவாக இந்தியா வென்றது. தொடர் தற்போது சமமாக உள்ளது.

விராட் கோலிதான் பாவம் யாரைப்பார்த்து அவர் கைத்தட்டுங்கள், விசில் அடியுங்கள் என்று சைகை செய்வார்?

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே