மேலும் 6 மாதங்களுக்கு மின்கட்டண சலுகை வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

கரோனா ஊரடங்கு காலத்திலும் கூடுதல் மின்கட்டணம் வசூலித்து நுகர்வோரைத் துன்பத்திற்கு ஆளாக்கி இருப்பது கண்டனத்திற்குரியது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 5) வெளியிட்ட அறிக்கை:

“நான்கு மாத மின் நுகர்வு இரு இரண்டு மாத மின் நுகர்வாகப் பிரிக்கப்பட்டு மின் கட்டணத் தொகை வசூலிக்கப்படுவது, தங்களிடம் நடத்தப்படும் பகல் கொள்ளையாக மின் நுகர்வோர் அதிர்ச்சியடைந்து கொந்தளிப்பது, அதிமுக அரசின் காதுகளில் விழாமல் இருப்பது கொடுமையாக இருக்கிறது.

‘கரோனா ஊரடங்கினால் மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை’ என்ற காரணத்தால், ‘முந்தைய மாதங்களில் மின் நுகர்வோர் செலுத்திய கட்டணத்தை (பி.எம்.சி) மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் செலுத்தலாம்’ என்று அதிமுக அரசு அறிவித்தது. 

அதை அப்படியே நம்பிய அப்பாவிப் பொதுமக்களுக்கு தற்போது மிகப்பெரிய ஏமாற்றமாகி, அதுவும் அதிமுக அரசின் 110 அறிவிப்புகள் போல் மாறி, கரோனா துயரத்தில் மூழ்கியிருக்கும் மக்களுக்கு, ‘ஷாக்’ ஏற்படுத்தியிருக்கிறது.

‘முந்தைய மாதக் கட்டணம் செலுத்தலாம்’ என்று அறிவிப்பு வெளியானபோதே, ‘அடுத்து வருகின்ற மாதக் கணக்கெடுப்பில் இந்த பி.எம்.சி கட்டணம் சரி செய்யப்படும்’ என்று உத்தரவாதம் தரப்பட்டது.

ஆனால் இப்போது மின் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அறிவிக்கப்பட்ட முறையில் உத்தரவாதம் தரப்பட்டபடி மின்கட்டணம் வசூல் செய்யாமல் குறிப்பாக யூனிட்டைக் கழிக்காமல் வெவ்வேறான வீதப்பட்டியல் (Tariff Slab) அடிப்படையில் புதிய மின் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

இதனால் பல்வேறு தரப்பு மின் நுகர்வோர்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பதற்றத்தினால் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நடிகர் பிரசன்னா இதுகுறித்துக் கேள்வி எழுப்பியும், அதற்கு முறையாக நியாயமான பதிலளிப்பதற்குப் பதில், பழிவாங்கும் விதமாக, அவரது மின் கட்டணத்தையே ஆய்வு செய்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அரசியல் ரீதியான அறிக்கையை ஒரு விளக்கமாகக் கொடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அதிமுக ஆட்சியில், ஆளுவோரைத் திருப்திப்படுத்துவதற்காக, அதிகாரிகளும் எந்த அளவுக்கு அரசியல்மயமாகி விட்டார்கள் என்ற அவலத்தை எடுத்துரைக்கிறது.

‘நான்கு மாத மின் நுகர்வை இரு இரண்டு மாத மின் நுகர்வாகப் பிரிக்காமல், கட்டணம் வசூலிப்பதுதான் இந்தப் பிரச்சினைக்குக் காரணம்’ என்பது நன்கு தெரிந்திருந்தும், ‘தாம் பிடித்த முயலுக்கு மூன்றே கால்தான்’ என்பது போல், மின் பகிர்மானக் கழகம் விந்தையான விளக்கமளிப்பதும் அதை அதிமுக அரசு ஆமோதித்து கரோனா காலத்தில் மக்களிடம் மங்காத்தா சூதாட்டம் போல், மின்கட்டண வசூலில் ஈடுபட்டு கெடுபிடி செய்வதும் பொறுத்துக் கொள்ள முடியாததாகும்.

மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்குப் பதில், ஊரடங்கில் வருமானத்தை இழந்து, வேலைவாய்ப்பை இழந்து, வாழ்வாதாரத்தையும் பறிகொடுத்துவிட்டுப் பரிதவிக்கும் அவர்களுக்கு, வீட்டுக்குப் பயன்படுத்தும் மின் கட்டணம் என்ற பாறாங்கல்லைத் தலையில் தூக்கி வைத்து அடித்தட்டு, ஏழை எளிய, நடுத்தர மக்களை அடியோடு நசுக்கிக் கூத்தாடும் அதிமுக அரசின் இந்தப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

ஆகவே, முந்தைய மாதம் மின் நுகர்வோர் செலுத்திய கட்டணம், மொத்த யூனிட்டை இரண்டு மாத நுகர்வாகப் பிரிப்பது, வீதப் பட்டியல் மாற்றத்தால் ஏற்படும் அதிக கட்டணம் உள்ளிட்டவற்றில், வேண்டுமென்றே உருவாக்கி இருக்கும் குழப்பங்களுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றும்; பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் உரிய முறையில், யூனிட்டுகளையும் கழித்து மின் கட்டணம் வசூல் செய்வதை அதிமுக அரசு உறுதி செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

கரோனா காலத்தில் ஜவுளி, பொறியியல் பொருள்கள், தானியங்கி, மின் பொருள்கள், தோல் பொருள்கள், ஆயத்த ஆடைகள், பிளாஸ்டிக் உள்ளிட்டவை தயாரிக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடிக் கிடந்தன.

தொழிலே இல்லாத போது எப்படி அவர்கள் எல்லாம் மின் கட்டணம் செலுத்துவார்கள்? அவர்களுக்கு என்ன மாதிரி நிவாரணம் வழங்கி மன நிம்மதி அளித்து, மீண்டும் தங்கள் தொழிலைத் தொடங்க வைப்பது என்ற அடிப்படை பொருளாதார ஊக்குவிப்பு பற்றியெல்லாம் கூட அதிமுக அரசுக்கு அக்கறை இருப்பதாகவே தெரியவில்லை.

விவசாயிகளும் எல்லா வகையிலும் சொல்லொணா துயரத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

ஆகவே, வேலைவாய்ப்புக்கும், தமிழகத்தின் பொருளாதாரக் கட்டமைப்புக்கும் மிக முக்கியப் பங்காற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்தும், விவசாயிகளிடமிருந்தும், முன்மாத மின்கட்டணத்தை வசூலிக்காமல், முந்தைய மாதம் செலுத்திய மின் கட்டணத்தையோ அல்லது மின் நுகர்வோர் எடுத்துக் கொடுத்த ரீடிங்கிற்கான கட்டணத்தையோ பேரிடர் நிவாரணமாக அறிவித்திட வேண்டும் என்றும் மேலும் ஆறு மாதங்களுக்காவது கரோனா கால மின் கட்டண சலுகைகளை வழங்கி தமிழகத்தில் வேளாண்மையும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிலும் இயல்பு நிலைக்குத் திரும்பிட ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும் என்றும், அதிமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே