மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தின் போது தன்னை தள்ளி விட்டனர் என மம்தா பானர்ஜி புகார்..!!

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கீழே தள்ளி விடப்பட்டு காயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு திரிணமூல் காங்கிரஸ் பாஜகவை குற்றம்சாட்டியுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.

முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதியும், இரண்டாம்கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதியும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறுகிறது.

இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். மனுத் தாக்கல் செய்தபின்னர் காரில் ஏற முயன்றபோது மம்தா பானர்ஜி கீழே விழுந்தார்.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் காரில் ஏற முயன்றபோது என்னை நான்கைந்து பேர் சேர்ந்து தள்ளிவிட்டனர்.

எனது காலைப் பாருங்கள் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இது திட்டமிட்ட தாக்குதல். நிச்சயமாக இதில் சதி இருக்கிறது. என்னைச் சுற்றி திடீரென்று காவலர்கள் யாருமே இல்லை” என்றார்.

முதல்வர் மம்தாவை காரின் பின்பக்க சீட்டில் அவரது மெய்க்காவலர்களை ஏற்றி உட்காரவைக்கும் காட்சி தொலைக்காட்சிகளில் வெளியானது.

நந்திகிராம் தொகுதியில் நேற்று மம்தா தங்கவிருந்த நிலையில் திடீர் தாக்குதலால் அவர் கொல்கத்தா அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆளுநர் தன்கர் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மம்தா பானர்ஜியின் உறவினருமான அபஜித் பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ”மே 2, ஞாயிற்றுக்கிழமை வங்க மக்களின் சக்தியைக் காணப்போகிறீர்கள். பாஜக உங்களைத் தூண்டுகிறது. தயாராய் இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே