இலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச!

9ஆவது நாடாளுமன்றம் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் பிரதமராக மஹிந்த ராஜபக்ச சற்று முன்னர் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சஷ முன்னிலையில் களனி ரஜமஹா விஹாரையில் (பௌத்த விஹாரை) இந்த பதவியேற்பு நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பௌத்த மதக்குருமார்கள், ஏனைய மதத் தலைவர்கள், முப்படையினர், அரசியல்வாதிகள், வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

களனி ரஜமஹா விஹாரையில் முதலில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றதை அடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சத்திய பிரமாணம் செய்துகொண்டார்.

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது.

இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாரிய வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

இந்த முறைத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்;ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்த அதேவேளை, அவர் இலங்கை வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்றதிலேயே அதிக விருப்பு வாக்குகளை பெற்றார்.

இதன்படி, மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்த முறை தேர்தலின் ஊடாக 5 லட்சத்து 27 ஆயிரத்து 364 வாக்குகள் கிடைத்திருந்தன.

மஹிந்த ராஜபக்ஷ நான்காவது முறையாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

2004ஆம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ, அதன்பின்னர் 2018, 2019 ஆகிய ஆண்டுகளிலும் பிரதமராக பதவியேற்றிருந்தார்.

இந்த நிலையில், இந்த முறை நான்காவது தடவையாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தின் புதிய அமைச்சரவை எதிர்வரும் 14ஆம் தேதி கண்டியில் பொறுப்பேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே