அண்ணா திருவுருவச் சிலைக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் அண்ணாவின் சிலைக்கு திமுக எம்.பிக்கள் மற்றும் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அண்ணாவின் சிலைக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதே போல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

டெல்லியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாவின் கொள்கைகளுக்கு இன்று தான் அதிக தேவை இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், நாக்பூரில் இருந்து கொண்டு பாஜக இந்தி திணிப்பு உள்ளிட்ட தனது கொள்கைகளை புகுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

இதே போல், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அண்ணாவின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த, காங்கிரஸ் கட்சி எம்.பி. திருநாவுக்கரசர், பேச்சாற்றலாலும் எழுத்தாற்றலாலும் தமிழுக்கு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியவர் அறிஞர் அண்ணா என புகழாரம் சூட்டினார்.

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அப்பொழுது, அக்கட்சியின் பொருளாளர் வெற்றிவேல், மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே