குடமுழுக்கு தீர்ப்பு: அரசியல் செய்வோருக்கு சம்மட்டியடி – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தஞ்சாவூர் பெரியகோவில் கும்பாபிஷேக விவகாரத்தில் அரசியல் செய்யும் நபர்களுக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு சம்மட்டி அடியாக இருக்கும் என அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு சென்னை மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் தமிழ்நாடு, பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் நுகர்வோர் திருவிழாவின் தொடக்கவிழா சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

நுகர்வோர் பாதுகாப்பு குறித்து கடந்த ஆண்டு வெளியான அருவம் திரைப்படத்தின் இயக்குநர் சாய் சேகர் மற்றும் படக்குழுவினருக்கு அமைச்சர் பாண்டியராஜன் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

இந்த நுகர்வோர் திருவிழாவில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து அரசுத்தரப்பில் 12 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

அவற்றில் பொதுமக்கள் தங்க நகைகள், பட்டுப்புடவைகள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை எவ்வாறு வாங்குவது, பொருட்களை வாங்கும்போது ISI தரம் எப்படி பார்ப்பது போன்ற நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விழாவில் பேசிய அமைச்சர் உணவுப்பொருள் வழங்கும்போது ஏதாவது கலப்படமோ அல்லது குறைபாடோ இருப்பதாக அறிந்தால் உடனடியாக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட அனைத்து நுகர்வோர்களுக்கும் உரிமையுண்டு என்றும், கலப்படங்கள் செய்பவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்றும் கூறினார்.

மேலும், திரைப்படங்களுக்கு அளவுக்கு அதிகமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் க.பாண்டியராஜன், தஞ்சாவூர் பெரியகோவில் குடமுழுக்கு விவகாரத்தில் அரசியல் செய்யும் நபர்களுக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு சம்மட்டி அடியாக இருக்கும் என தெரிவித்தார்.

சமஸ்கிருத மந்திரங்களை நிறுத்துவதன் மூலம் தவறுகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது எனக்கூறிய அமைச்சர் பாண்டியராஜன், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு செய்யப்படும் என்று கூறினார்.

காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையும், இறை நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையும் சிதைக்கப்படாது எனவும் கூறிய அமைச்சர், அதே வேளையில், தொன்மையான மொழியான தமிழுக்கும் முக்கியத்துவம் தரப்படும் எனவும் தெரிவித்தார்.

தஞ்சாவூர் பெரியகோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே