ஜேடியூ கட்சியில் இருந்து பிரசாந்த் கிஷோர் நீக்கம்..!

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து, கட்சியின் துணைத் தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் பிரபலமான தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர், 2014ல் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்ததில் இவரின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளுக்கு இவர் தேர்தல் உத்திகளை வகுத்து வழங்குவது அனைவரும் அறிந்ததே. 

கடந்த 2018ஆம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்த பிரசாந்த் கிஷோர், அண்மை காலமாக நிதிஷ் குமாரின் முடிவுகள் குறித்து விமர்சித்து வந்தார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த போதிலும் சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், மக்கள் தொகை பதிவேடிற்கு எதிராகவும் பிரஷாந்த் கிஷோர் கடுமையாக பேசி வருவதுடன், டிவிட்டர் பக்கத்திலும் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

இதுகுறித்து, நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் மனம் திறந்த நிதிஷ்குமார், மத்திய உள்துறை அமைச்சராக உள்ள அமித் ஷா கேட்டுக்கொண்டன் பேரில், கட்சியில் பிரசாந்த் கிஷோரை சேர்த்ததாக கூறினார்.

குடியுரிமை திருத்தசட்டத்திற்கு எதிரான கடுமையான நிலைபாட்டை எடுத்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணை தலைவர் பிரஷாந்த் கிஷோர், கட்சியிலிருந்து விலகினாலும் பரவாயில்லை என்று நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த பிரசாந்த் கிஷோர், தன்னை பற்றி நிதிஷ்குமார் கூறுவது பொய் என்றார்.

இந்நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து, பிரசாந்த் கிஷோரும், கட்சியின் பொதுச்செயலாளர் பவன் வர்மாவும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே