மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மார்ச் 31-க்குள் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.

தென்காசியை சேர்ந்த பாண்டியராஜா ஆர்டிஐ-யில் கேட்ட கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சகம் இவ்வாறு பதில் அளித்துள்ளது.

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசின் சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் இதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என மத்திய குழு ஆய்வு செய்தது.

அதன் அடிப்படையில், மதுரையில் 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது.

இதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் அடிக்கல் நாட்டியதுடன் வேறு எந்த பணிகளும் இதற்காக நடைபெறவில்லை.

இந்நிலையில் தென்காசியை சேர்ந்த பாண்டியராஜா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஆர்டிஐ-யில் கேட்ட கேள்விக்கு, எய்ம்ஸ் மருத்துவமனை காண திட்ட மதிப்பீடு ரூபாய் ஆயிரத்து 264 கோடியில் இருந்து ரூ. 2 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2,000 கோடியில் 85 சதவீதம் நிதி தொகையை ஜப்பான் ஜைக்கா நிறுவனம் கடனுதவி அளிக்கிறது.

கடன் ஒப்பந்தம் பற்றி டிசம்பர் 24 இல் இந்தியாவின் ஜைக்கா நிறுவன குழுவும், ஜப்பான் குழுவும் ஆலோசித்ததாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சேர்க்கைக்காக தற்காலிக கட்டிடங்கள் எதுவும் தேர்வு செய்யப்படவில்லை.

100 மருத்துவ படிப்பு, 60 செவிலியர் படிப்புக்கு ஒதுக்கீடு உள்ள நிலையில் தற்காலிக மாணவர் சேர்க்கை இல்லை எனவும்; எய்ம்ஸ் கட்டுமான பணிகள் நிறைவடைந்த பின்னரே மாணவர் சேர்க்கை நடக்கும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே