இந்திய- பிரேசில் இடையே 15 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன், அவரது மகள் லாரா போல்சொனாரோ, மருமகள் லெட்டிசியா பிர்மோ, மற்றும் அமைச்சர்கள் 8 பேர், பிரேசில் எம்.பிக்கள் நான்கு பேர் மற்றும் வர்த்தக குழுவினரும் வந்துள்ளனர்.
இன்று காலையில் டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு சென்ற பிரேசில் அதிபர் அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர் அவர் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்திற்கு சென்றார். அங்கு அவரை பிரதமர் மோடி கை குலுக்கி வரவேற்றார்.
இதைத்தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சு வார்த்தைக்கு பின்னர் இந்தியா – பிரேசில் இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சுகாதாரம், மருத்துவம், இணையதளப் பாதுகாப்பு, உயிரி எரிசக்தி, மருத்துவம், சுகாதாரம், சமூக பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பை நல்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதன் பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பிரேசில் அதிபர், இருநாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
புதிய ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா – பிரேசில் இடையே ஆன உறவு புதிய உச்சத்தை எட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வின் போது பேசிய பிரதமர் மோடி, குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் பங்கேற்க ஒத்துக்கொண்டதற்கு நன்றி தெரிவித்தார்.
இந்தியாவின் பன்முகதன்மையை குடியரசு தின விழா பறைசாற்றும் என்ற அவர், பிரசிலும் இதே போல பல விழாக்களை கொண்ட நாடு என்றார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் பொல்சொனரோ கலந்து கொள்கிறார்.
மேலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, ஆகியோரையும் பிரேசில் அதிபர் சந்திக்கிறார்.