45 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் – மத்திய அரசு விளக்கம்..!!

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக 222 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்து விட்டதாக தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.

வரும் மார்ச் மாதத்திற்கு பின் பணிகள் தொடங்கி 45 மாதங்களில் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.

மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவிட கோரிய வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக 200 ஏக்கர் நிலம் ஏற்கனவே மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும்; கூடுதலாக கேட்ட 22 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டு, அதற்கான ஆவணங்களும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது என்றும் தெரிவித்தார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக ஜப்பான் நிறுவனத்திடம் கடன் பெறுவது மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான முன் வரைவு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

அப்பணிகள் 2021 மார்ச் 31-ஆம் தேதிக்குள்ளாக முடிவடையும் என்பதால், அதன் பிறகு பணிகள் தொடங்கப்பட்டு 45 மாதங்களில் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும்” என தெரிவித்தார்.

விரைவாக நடவடிக்கை எடுக்காத மத்திய அரசின் போக்கு வருத்தமளிக்கிறது” என தெரிவித்து வழக்கினை தீர்ப்பிற்காக நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே