சிங்கப்பூர் போல் சென்னை மாற ஆயிரம் ஆண்டுகளாகும் – நீதிபதிகள்

மழைநீர் வடிகால் மற்றும் சாலைகளின் நிலையைப் பார்க்கும்போது சிங்கப்பூரை போல சென்னையை மாற்ற சுமார் ஆயிரம் ஆண்டுகளாவது ஆகும் என்று கருத்துக் கூறிய உயர்நீதிமன்ற நீதிபதிகள், அப்போது சிங்கப்பூர் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் நோக்கி சென்று இருக்கும் எனவும் கூறினர்.

தொலைபேசி இணைப்புகளுக்காக சாலையை தோண்டிவிட்டு, அவற்றை சீரமைக்காததை எதிர்த்து, ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் மோகன் ராஜ் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது மோசமான சாலைகளை கண்டறியவும், மழைநீர் வடிகாலை ஆராயவும் இரண்டு வழக்கறிஞர்களை ஆணையர்களாக சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே நியமித்துள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கடந்த 2015-ஆம் ஆண்டை போல வெள்ளம் மீண்டும் சென்னையில் ஏற்படாது என்று மாநகராட்சி உறுதி அளித்தது.

குறிப்பாக 80 சதவிகித மழைநீர் வடிகால்கள் சீர்அமைக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்தது.

இதைக்கேட்ட நீதிபதிகள், சென்னையில் இருக்கும் பெரும்பாலான சாலைகள் மோசமான நிலையில் இருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.

சென்னையை சிங்கப்பூருக்கு இணையாக மாற்ற ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்றும், ஆனால் அதற்குள் சிங்கப்பூர் பத்தாயிரம் ஆண்டுகள் முன்னோக்கிச் சென்று விடும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

மேலும் கழிவுநீர் கால்வாய்களை சாலை நடுவே அமைக்காமல், சாலை ஓரங்களில் அமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டது மற்றும் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டது குறித்து விரிவான அறிக்கையை நவம்பர் 18-ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே