மதராசபட்டினம் 10 வருடங்கள் நிறைவு! ஹாலிவுட் நடிகையை அணுகிய விஜய்.. எமி ஜாக்சன் தேர்வானது எப்படி?

மதராசபட்டினம் படத்திற்கு எமி ஜாக்சன் தேர்வாகும் முன்பு ஒரு ஹாலிவுட் நடிகையை அணுகியதாக இயக்குனர் விஜய் தெரிவித்துள்ளார்.
மதராசபட்டினம் படம் வெளிவந்து பத்து வருடங்கள் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்தியா சுதந்திரம் பெறும் காலத்திற்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த காலத்தில் நடப்பது போன்று தான் இந்த படத்தின் கதை இருந்தது. ஆர்யா மற்றும் எமி ஜாக்சன் இதில் நடித்திருந்தனர். அந்த படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் பற்றி இயக்குனர் விஜய் மற்றும் நடிகை எமி ஜாக்சன் இருவரும் ஆன்லைன் பேட்டியில் பகிர்ந்த ஒரு சில விஷயங்கள் இதோ..
மதராசபட்டினம் 10 வருடங்கள் நிறைவு செய்தது பற்றி பேசிய விஜய், “எனக்கு இது 10 ஆண்டுகள் போல தெரியவில்லை. இது நம் அனைவருக்கும் ஒரு ஸ்பெஷலான படம். மிகவும் கடினமான ஷுட்டிங் நாட்கள் மற்றும் தூக்கமில்லாத இரவுகள் என் நினைவில் இருக்கின்றது. ஆனால் இத்தனை கடின உழைப்பு பலனைத் தந்தது. ஒரு புதிய முயற்சி என் மனதிற்கு சரி என தோன்றுவது போல செய்தோம். அது எதிர்பார்த்த அளவு ஒர்கவுட் ஆனது. நான் இயக்கிய படங்களில் மிகவும் சிறந்தது இது தான் என தற்போதும் ரசிகர்கள் கூறுகிறார்கள். அதைவிட சிறப்பான ஒன்றை நான் செய்யவில்லை என்பதை நினைத்து சந்தோஷப்படுவதா இல்லை வருத்தப்படுவதா என்று தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேசிய எமிஜாக்சன், “நான் இந்த படத்திற்காக தான் முதல் முறையாக இந்தியாவிற்கு வந்தேன். நான் ஐரோப்பாவை விட்டு வெளியில் வந்ததே கிடையாது. மதராசப்பட்டினம் படத்திற்கு என் இதயத்தில் மிகப்பெரிய இடம் இருக்கிறது. என் வாழ்க்கையையே மாற்றியது இந்தப் படம் தான்” என தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் துவங்கியது பற்றி பேசிய விஜய், “நான் முதல் முறையாக கேமராமேன் நீரவ் ஷாவிடம் தான் கதையை கூறினேன். அவர் என்னை ஆர்யாவிடம் கூட்டி சென்றார். இது எங்களது கனவு படம். கல்பாத்தி அகோரம் சார் இதை சாதிக்க எங்களுக்கு உதவினார். அவர் தான் இந்த படத்தின் முதுகெலும்பு. அவர் மற்றும் ஆர்யா இருவரும் சேர்ந்து தான் இந்த படத்தை உருவாக்க ஒப்புக்கொண்டார்கள். நான் அப்போது பெரிய இயக்குனர் அல்ல. ஆர்யாவும் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். அந்த சமயத்தில் ஒரு மிகப் பெரிய தொகையை முதலீடு செய்தது எங்கள் மீது இருந்த மிகப் பெரிய நம்பிக்கையால் தான். எமி ஜாக்சனின் கதாபாத்திரம் தான் முழு கதையையும் தாங்கி செல்லும். அதற்கு ஒரு சரியான நபர் தேர்வு செய்தால் படம் சிறப்பாக அமையும் என்று எனக்கு தோன்றியது. அந்த ரோலுக்கு எமி ஜாக்சன் கிடைத்தது கடவுள் எங்களுக்கு கொடுத்த வரம்” என தெரிவித்துள்ளார்.
எமி ஜாக்சன் நடித்த ரோலில் நடிப்பதற்காக முதலில் ஹாலிவுட் நடிகைகளை தான் அணுகினாராம் ஏ.எல். விஜய். Vanessa Hudgens என்ற நடிகையையும் ஒரு ஏஜென்ட் மூலமாக அணுகினாராம். ஆனால் அவர் நடிக்கவில்லை. “அதற்குப் பிறகு ‘மிஸ் டீன் வேர்ல்டு’ புகைப்படத்தை நான் இணையத்தில் பார்த்தேன். அவரது பெயர் கூட எனக்கு அப்போது தெரியாது. அதன் பின் UK ஏஜென்ட்டை அழைத்து நான் அவரை சந்திக்க வேண்டும் என கேட்டேன். எமி ஜாக்சன் தான் அது. அவரை நேரில் சந்திக்கும் முன்பே அவர் தான் ஹீரோயின் என முடிவு செய்துவிட்டேன்” என விஜய் தெரிவித்துள்ளார்.

“நான் லண்டன் சென்ற போது பல பெண்களை ஆடிஷன் செய்தேன். என்னுடைய ஏஜென்ட் எமி ஜாக்சனின் ஏஜென்டை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனாலும் ஏஜென்ட் என்னிடம் பொய் சொல்லிக் கொண்டு இருந்தார். எமி நாளை வந்துவிடுவார் என பொய் சொல்லி என்னை ஏமாற்றி கொண்டு இருந்திருக்கிறார். பின்னர் கடைசி நாளில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. அதற்குப் பிறகு தான் எமி ஜாக்சன் ஆடிஷன் வரிசையில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். நான் நேராக அவரிடம் சென்று, அவர் தான் என்னுடைய ஹீரோயின் என ஏஜென்டிடம் கூறிவிட்டேன். அவரை ஆடிஷன் கூட செய்யவில்லை. அவர் பள்ளி சீருடையில் தான் வந்திருந்தார் என நினைக்கிறேன்” என விஜய் கூறியுள்ளார்.
இவ்வாறு எமி ஒப்பந்தம் ஆனது பற்றிய அனுபவத்தை விஜய் பகிர்ந்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே