அடிச்சுதூக்கு: மலேசியாவில் இன்று மீண்டும் ரிலீஸாகும் விஸ்வாசம் .

அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான விஸ்வாசம் படம் மலேசியாவில் இன்று மீண்டும் ரிலீஸாகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, விவேக், கோவை சரளா, அனிகா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்துடன் சேர்ந்து வெளியானது விஸ்வாசம்.
ரஜினியின் படத்தோடு விஸ்வாசம் வருகிறேதே, பாக்ஸ் ஆபீஸில் தாக்குப்பிடிக்குமா என்று கேள்வி எழுந்தது. ஆனால் பேட்ட படத்தால் விஸ்வாசத்தின் வசூல் கொஞ்சம் கூட பாதிக்கப்படவில்லை. அஜித்தின் கெரியரில் முக்கியமான படமாக விஸ்வாசம் அமைந்தது.

அப்படி சூப்பர் ஹிட்டான விஸ்வாசம் படம் மலேசியாவில் இன்று மீண்டும் வெளியாகிறது. கொரோனா வைரஸ் பிரச்சனையால் மலேசியாவில் இருக்கும் அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டன. தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சினிமா பிரியர்களை தியேட்டர்களுக்கு வரவழைக்கும் முயற்சியாக மலேசிய தியேட்டர் உரிமையாளர்கள் அஜித்தின் விஸ்வாசம் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.

விஸ்வாசம் மட்டும் அல்லாமல் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கோமாளி படத்தையும் இன்று மீண்டும் ரிலீஸ் செய்கிறார்கள். கொரோனா வைரஸ் பிரச்சனையால் மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் திறந்த பிறகு அஜித் படத்தை மீண்டும் வெளியிடுவது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

தற்போது மலேசியாவில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததால் முழுவதுமாக முடங்கிப் போனது திரைத்துறை தான். தமிழகத்தில் தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படவில்லை. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவதற்கு பதில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
அதிலும் குறிப்பாக சென்னையில் வசிப்போர் கொரோனா வைரஸ் பயத்தில் இருக்கிறார்கள். சென்னையில் வசித்த பலர் உயிர் பிழைத்தால் போதும் என்று தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். சென்னையில் நிலைமை மோசமானதை அடுத்து தான் பலரும் ஊரை காலி செய்துவிட்டனர்.

சின்னத்திரை ஷூட்டிங்கை 60 பேரை வைத்து நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து ஷூட்டிங்கும் துவங்கப்பட்டது. ஆனால் வைரஸின் தாக்கம் அதிகமானதால் சின்னத்திரை ஷூட்டிங் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

படங்களின் ஷூட்டிங் எதுவும் மீண்டும் துவங்கப்படவில்லை. ஷூட்டிங் நடக்காததால் அன்றாடம் உழைத்து சாப்பிடுவோர் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்பொழுது கொரோனா வைரஸ் பிரச்சனை தீர்ந்து, எப்பொழுது வேலைக்கு செல்வது என்று பல கலைஞர்கள் இடிந்து போயுள்ளனர். வேலை இல்லாமல் வீட்டில் முடங்கியிருப்பதால் பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தியேட்டர்கள் திறக்கப்பட்டால் தான் திரைத்துறை மீண்டும் செயல்படும். அதுவரை வீட்டில் சும்மா இருந்தால் வருமானம் எப்படி வரும் என்று இயக்குநர் ஆனந்த் சென்னை மவுலிவாக்கத்தில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். நண்பரின் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து கடை நடத்தி வருகிறார். மாஸ்க் அணிந்து ஆனந்த் அரிசி, பருப்பு விற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதை பார்த்த ரசிகர்கள் ஆனந்துக்காக பாவப்பட்டாலும், அவரின் மன தைரியத்தை பாராட்டியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே