பாகிஸ்தானில் இருந்து படையெடுக்கும் வெட்டுக்கிளி கூட்டங்களால் குஜராத், ராஜஸ்தான் மாநில எல்லையோர விவசாய நிலங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.
பைபிளை தழுவி எடுக்கப்பட்ட EXODUS எனும் ஹாலிவுட் படத்தில் வெட்டுக்கிளி கூட்டத்தின் படையெடுப்பால் ஒரு நாடே அழிக்கப்படும்.
கம்யூட்டர் கிராபிக்ஸ் என்பதே தெரியாத வகையில் மிக பிரம்மாணமாக எடுக்கப்பட்டிருந்த அந்த காட்சிகள் பார்த்து பார்வையாளர்கள் வியந்தனர்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த காப்பான் திரைப்படத்திலும் வெட்டுக்கிளி கூட்டங்களை உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தியிருந்தனர்.
தற்போது EXODUS மற்றும் காப்பான் பட பாணியில் குஜராத் மாநில விளைநிலங்களை வெட்டுக்கிளி கூட்டங்கள் சூறையாடிக்கொண்டிருப்பதை நினைத்து வேதனையில் ஆழ்ந்துள்ளனர் விவசாயிகள்.
பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள Banaskantha, Patan மற்றும் Kutch உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் புற்றீசலாய் பெருகி வரும் வெட்டுக்கிளி பூச்சிகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆமணக்கு, எள், பருத்தி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்களை பூச்சிகள் நாசம் செய்து வருவதால் தார்ப்ப்பாய்களை கொண்டு பயிர்களை மூடியும், பாத்திரங்களை தட்டி சத்தம் எழுப்பியும் விவசாயிகள் அவற்றை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து ஐ.நா.சபையின் உணவு மற்றும் வேளாண்துறை எச்சரிக்கை விடுத்த போதும் அதிகாரிகள் மெத்தனமாக இருந்ததால் பூச்சிகளின் படையெடுப்பு பெருகி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வெட்டுக்கிளி கூட்டம் சோமாலியாவில் இருந்து சவுதி அரேபியா, பாகிஸ்தான் வழியாக இந்திய எல்லைகளை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு நாளைக்கு 200 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து செல்லும் வெட்டுக்கிளி கூட்டம் செல்லும் இடங்களில் உள்ள விவசாய பயிர்களை எல்லாம் நாசம் செய்து கொண்டு செல்கின்றது.
பாகிஸ்தானில் 20 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலமும் குஜராத்தில் மட்டும் ஆயித்து 800 ஹெக்டேர் விளைநிலங்களும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் வேளான் அதிகாரிகளும் வல்லுனர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
இதனால் குஜராத்தையும் கடந்து பிற மாநிலங்களுக்கும் இந்த வெட்டுக்கிளி கூட்டம் படையெடுக்குமோ என அச்சம் ஏற்பட்டு இருக்கிறது.