கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நான்காவது முறையாக பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்றும், அது மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 3-ஆம் கட்டமாக அமலில் உள்ள ஊரடங்கு, வரும் 17-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதனிடையே மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி 5-வது முறையாக நேற்று (திங்கள்கிழமை) ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று (செவ்வாய்கிழமை) உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலர் தங்களுடைய வேலையை இழந்துள்ளனர். வெளிநாடுகளில் லட்சக்கணக்கில் மக்கள் பலியாகியுள்ளனர்.

நாம் கடினமான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் வாழ்க்கை நடத்துவதே சிரமமாக உள்ளது.

இப்படியொரு நிலைமையை நாம் பார்த்ததே கிடையாது. இந்த இக்கட்டான நிலையிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும்.

இந்த கரோனா தொற்று இந்தியாவுக்கு ஒரு செய்தி சொல்கிறது. இந்தியாவில் பிபிஇ சிறப்பு உடைகள் உற்பத்தி செய்யப்பட்டதில்லை.

இன்று 2 லட்சம் பிபிஇ சிறப்பு உடைகள் தயாரிக்கப்படுகின்றன. கரோனாவால் உலகமே மாறிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் மாற்றங்களை உலகமே கவனிக்கிறது. அதேசமயம், நாமும் உலகைக் கவனித்து வருகிறோம். இந்தியாவின் மாற்றங்கள் உலகையே மாற்றியமைக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்தியாவின் மருந்துகள் புதிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது.

இந்தத் தருணத்தில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது. மனித குலத்துக்கான பல நன்மைகளை இந்தியா மேலும் செய்யும்.

இந்தியா தங்கச் சுரங்கம் போன்ற நாடு. இந்தியாவின் துயரங்கள், மக்கள் படும் அவதி விரைவில் முடிவுக்கு வந்துவிடும். கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கக்கூடியவர்கள் இங்கே இருக்கிறார்கள். இந்தியா அதை உறுதியாகச் செய்யும்.

நிலநடுக்கங்கள் என மக்கள் நிறைய பார்த்திருக்கிறார்கள். எனவே, நம்மால் எதையும் எதிர்கொள்ள முடியும். இந்தியா தனித்தன்மை கொண்ட நாடு.

பொருளாதாரமும், உட்கட்டமைப்பும் இந்தியாவின் 2 தூண்கள். இந்தியாவின் பலம் நம்முடைய ஜனநாயகம். இங்கு விநியோக அமைப்பு பாதிக்கப்படாது.

பொருளாதாரத்தை மீட்க ரிசர்வ் வங்கியின் மூலம் ரூ. 20 லட்சம் கோடி நிவாரண நிதி ஒதுக்கப்படுகிறது. இது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாகும்.

இதன் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றின அறிவிப்புகள் நாளை வெளியிடப்படும்.

இந்த சிறப்புத் திட்டங்கள் மூலம் இந்தியா நல்ல முன்னேற்றம் பெறும். அனைவருக்கும் பலன் கிடைக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. உள்நாட்டு தயாரிப்புத் திட்டத்துக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

இக்கட்டான சூழ்நிலையில் இது மிகவும் உதவியாக இருக்கும். தொழிலாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு வரப் பிரசாதமாக அமையும்.

அதேசமயம், நாம் உள்நாட்டுப் பொருள்களை வாங்குவதில் கர்வம் கொள்ள வேண்டும். கதர் மற்றும் கைத்தறி வாங்கச் சொன்னபோது வெற்றிகரமாக செய்துகாட்டினீர்கள்.

கரோனா இன்னும் பல மாதங்கள் நம்முடன் இருக்கும். எனவே, எப்போதும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

நான்காவதாக அறிவிக்கப்படவுள்ள பொது முடக்கம் வித்தியாசமாக மாறுபட்டதாக இருக்கும். இதுபற்றின விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

4 ஆம் கட்ட ஊரடங்கை நீட்டிப்பது பற்றி மே.18 ஆம் தேதிக்கு முன்பு அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.

கரோனாவைச் சமாளித்துக்கொண்டே நாமும் முன்னேற வேண்டும். இந்தியாவின் முன்னேற்றத்தை யாரும் தடுக்க முடியாது. உங்கள் குடும்பத்தையும் உங்களையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே