ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு – கடலூரில் போட்டியின்றி தேர்வு ?

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தவிர 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி முடிவடைந்தது.

மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர் ஆகிய நான்கு பொறுப்புகளுக்கு நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவதற்காக 2 லட்சத்து 98 ஆயிரம் பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிவடைந்த நிலையில் போட்டியிட விரும்பாத பலர் இன்று தங்களுடைய மனுக்களைத் திரும்பப் பெற்றனர்.

இதைத்தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 373 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் முழுவதும் 6039 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருந்த நிலையில் 20 ஆயிரத்து 520 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர்.

அவர்களில் 20 ஆயிரத்து 370 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இதில் இரண்டு ஊராட்சிகளில் ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒருவர் மட்டுமே போட்டியிடுகின்றனர்.

அதைப்போல ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 371 ஊராட்சிகளில் தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதனடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 373 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே