கோவா சர்வதேச திரைப்பட விழாவின் 50ம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தனது Twitter பக்கத்தில் டுவிட் செய்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்திய சினிமாவுக்கு ரஜினிகாந்த் அளித்த சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஐகான் ஆஃப் கோல்டன் ஜூபிலி ஆஃப் ஐஃபா 2019 (ICON OF GOLDEN JUBILEE OF #IFFI2019) என்ற விருது வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
சினிமா நட்சத்திரம் ரஜினிகாந்துக்கு இந்த விருதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நவம்பர் 20 முதல் 28 தேதி வரை கோவாவில் நடைபெறவுள்ள 50 ஆம் ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது ரஜினிக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள், சினிமா ஆர்வலர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த விழாவில் பாலிவுட் முன்னணி நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாஹிப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல் பிரெஞ்ச் நடிகை இசபெல்லா ஹூபெர்ட்டுக்கு வெளிநாட்டு கலைஞர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.
கோவா சர்வதேச திரைப்பட விழாவின் 50 ஆண்டு கொண்டாட்டத்தில் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு விருதுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த், இந்த மதிப்பு மிக்க கவுரவத்தை வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.