மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், சிவசேனா சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியில் பங்கு கேட்டது. ஆனால் இதற்க்கு பாஜக சம்மதிக்கவில்லை.
இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி 9 நாட்கள் ஆன நிலையிலும் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இதனிடையே பாஜக ஆதரவின்றி ஆட்சியமைக்கப் போவதாக சிவசேனா கூறி வருவதால், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவை பெற சிவசேனா முயற்சிப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மகாராஷ்டிராவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள், டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து பேசினர். அதில் மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டதாகவும், சிவசேனாவுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக விவாதிக்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், வரும் 4ம் தேதி டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து, சிவசேனாவுக்கு ஆதரவளிப்பதன் சாதக பாதகங்கள் தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்தும் சரத்பவாரை சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது