பார்வை மாற்றுத்திறனாளியான திருமூர்த்தியை பின்னணி பாடகராக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைவதாக இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டியைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி, விசுவாசம் படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடலை பாடிய காணொளி சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வந்தது.
இதை பார்த்த இசை அமைப்பாளர் டி.இமான், திருமூர்த்தியின் தகவல்களைப் பெற்றுக் கொண்டு அவருக்கு விரைவில் வாய்ப்பு அளிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ஒன்றில் திருமூர்த்தி பாடி இருப்பதாகவும், அவரை பின்னணி பாடகராக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி என்றும் டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் விரைவில் குரலில் ஆத்மார்த்தமான பாடல் வெளியாகும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.