பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை உயர்த்தி பிடிப்போம்; ஆட்சியை மீண்டும் அமைப்போம்; தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் கடிதம்

அண்ணாவின் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்போம்! ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் அமைப்போம்! என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (செப். 13) அமமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:

“தமிழக மக்கள் நலன், தமிழகத்தின் நலன் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்லும் நமது பாதையில் நாம் சந்தித்த சூழ்ச்சிகளும், நெருக்கடிகளும் ஏராளம்.

அவை அனைத்தையும் மோதி தகர்த்துதான் நமது பயணத்தை உற்சாகமாக தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால், நாம் இதுவரை எதிர்கொண்டுவந்த நெருக்கடிகளுக்கும், கரோனா எனும் பேரிடருக்கும் பெரிய வேறுபாடு உண்டு.

உலகத்தின் இயல்பு வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது இந்த நோய்த்தொற்று.

அறிவியல் விந்தைகள் நிகழ்ந்துவரும் இக்காலகட்டத்தில் கூட இப்படி நம்மை ஒரு நோய்க்கிருமி முடக்கிவிடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

கரோனா நோய்க்குரிய மருந்து இன்றுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் நாம் கவனமாக இருப்பது மட்டுமே நம்மை தற்காத்துக்கொள்ளும் வழிமுறையாக உள்ளது.

ஓர் அரசியல் இயக்கமாக நமது பயணத்தை நாம் இயல்பாக தொடர்வதற்கு இந்தச் சூழல் பெரும் சவாலை ஏற்படுத்தினாலும், கூட்டமாக கூடுவது நோய்த்தொற்றுக்கான வாய்ப்பாக மாறிவிடக்கூடாது என்பதிலும் அமமுக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் அமமுக நிகழ்ச்சிகள் மூலமாக பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதிலும் நாம் மிக உறுதியாகவே இருக்கிறோம்.

சிலரைப்போல எல்லாவற்றிலும் அரசியல் செய்வது, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் கூட வாக்கு கணக்கைப் பற்றியே எண்ணுவது போன்ற அழுக்கு சிந்தனைகள் நமக்கு எப்போதுமே இருந்ததில்லை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

அதே நேரத்தில், தமிழகத்தின் உரிமைக்கான குரலை ஓங்கி ஒலிப்பதிலும், மக்களுக்கான உதவிகளை வழங்குவதிலும் எப்போதும் நாம் சமரசம் செய்து கொண்டதில்லை.

ஊரடங்கு காலத்தில் ஒவ்வொரு தொண்டரும் ஓர் ஏழை குடும்பத்திற்காவது உதவிடவேண்டும் என்ற எனது அன்பு வேண்டுகோளை ஏற்று ஏழை, எளிய மக்களுக்கு அமமுகவினர் உதவியதையும், இன்றளவும் உதவி வருவதையும் யாராலும் மறுக்க முடியாது.

தமிழகம் முழுக்க நம்முடைய அமமுகவினரால் ஆர்ப்பாட்டமின்றி செய்யப்பட்ட இத்தகைய உதவிகளை மக்கள் உச்சிமுகர்ந்து பாராட்டிய செய்திகள் மனநிறைவைத் தருகின்றன.

பெருந்தொற்றான கரோனா நம்மை முடக்கிப்போட்ட நிலை தற்போது சற்றே மாறி உலகம் மெதுவாக இயல்புக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் மருத்துவ உலகின் ஆலோசனைகளை இன்னும் சில காலத்திற்கு நாம் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.

இந்நிலையில், நம்முடைய கொள்கைத் தலைமகன், அறிவுலக ஆசான், தமிழ்த்தாயின் மூத்தப் பிள்ளை, பெரியாரின் முதல் மாணாக்கர் அண்ணாவின் 112-வது பிறந்த தினம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வருகிறது.

நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது, இரு மொழிக் கொள்கையைச் சட்டமாக்கியது, சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம், கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு என அடுக்கிக்கொண்டே போகுமளவுக்கு அண்ணாவின் சாதனைகள் இருந்தாலும், 50 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா சொன்ன எத்தனையோ கொள்கைகள், வார்த்தைகள், விளக்கங்கள் இன்றைய சூழலுக்கும் மிகவும் பொருந்துகிற அளவுக்கு அவரது தீர்க்கதரிசனம் அனைவரையும் பிரமிக்க வைக்கக்கூடியது.

‘அரசாங்கத்தின் குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கு மக்களிடம் ஆதரவு இருக்கிறதா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ள வாக்களிப்பு முறையைச் செயல்படுத்தாதவரை ஜனநாயகத்துக்கான எந்தப்பலனையும் மக்கள் எதிர்பார்க்க முடியாது என்று 50 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய நாடாளுமன்றத்தில் முழங்கியவர் அண்ணா.

அன்றைக்கு அண்ணா சொன்ன அத்தகைய ஜனநாயக வழியைத்தான் இன்றைக்குமுக்கியமான செயல்பாடுகளில், ஆட்சியாளர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தி வருகிறோம்.

‘தமிழ் மக்களுடைய தனித்தன்மைகளையும் கட்டிக்காத்து, அதே நேரத்தில் தேசிய இலக்குகளுக்கு வலிமை சேர்க்கிற வகையில் ஒருமைப்பாட்டுக்காக உழைப்பதும், பேத உணர்ச்சிகள், பிரிவினை எண்ணங்கள் வளர இடம் தராமல் பார்த்துக்கொள்வதுமே அண்ணா அவர்கள் கட்டிக்காத்த குறிக்கோள்கள்’ என்று அண்ணாவின் இதயக்கனியான எம்.ஜி.ஆர் சொன்ன இந்த வைர வரிகளை, எந்நாளும் கடைபிடிக்கிற இயக்கமாக அமமுக திகழ்கிறது.

இப்படி அண்ணாவின் கொள்கைகளை எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வழியில் உயர்த்திப் பிடித்துப் புதிய வெற்றிகளுக்கு அடித்தளமிடுவோம். ஜெயலலிதா கட்டிக்காத்த தமிழ்நாட்டு பெருமைகளையும், தமிழக மக்களின் நலன்களையும் மீட்டெடுத்திட அண்ணாவின் பிறந்தநாளில் உறுதி ஏற்போம்.

அதோடு, ஜெயலலிதா இல்லாத துணிச்சலில், ‘இன்னும் 8 மாதங்களில் நாங்களே ஆளுங்கட்சி’ என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கும் தீயசக்தியான திமுகவை இந்த மண்ணில் திரும்பவும் தலையெடுக்க விடாமல் செய்கிற ஆற்றல் ஜெயலலிதாவின் உண்மையான பிள்ளைகளான நமக்குத்தான் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் நேரம் நெருங்குகிறது.

வருகிற சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் அதை நிச்சயம் நாம் செய்து காட்டி ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியைத் தமிழகத்தில் அமைப்பதற்கு சபதம் ஏற்போம்.

பதுங்குவதாக நம்மை பார்த்து இன்று பழிப்பவர்கள் எல்லாம், ஜெயலலிதா வளர்த்த சிங்கக்குட்டிகளாக நாம் களத்தில் சீறிப்பாய்ந்து பணியாற்றும்போது காணாமல் போய்விடுவார்கள். அந்தளவுக்கு மக்களின் அன்பை, ஆதரவை வென்றெடுப்பதற்கான அடிப்படை உத்திகளுடனும், திட்டங்களுடனும் நாம் தயாராகி இருக்கிறோம்.

அவற்றை எல்லாம் செயல்படுத்துவதற்கான உறுதி ஏற்கும் தினமாக அண்ணாவின் பிறந்தநாளை அமைத்துக்கொள்வோம். அன்றைய தினத்தில் அமமுக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி கழக அலுவலகங்களில் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திட வேண்டுகிறேன். எப்போதும், என் கண்மணிகளாக நான் நேசிக்கும் அமமுகவினர் அனைவரும் நல் ஆரோக்கியத்துடன் கட்சிப் பணியினையும், மக்கள் பணியையும் சிறப்போடு ஆற்றிடுவது மிக முக்கியம்.

எனவே, இந்நிகழ்ச்சிகளில் முகக்கவசம் அணிந்து, தனி நபர் இடைவெளியைக் கடைபிடித்திடுவது அவசியம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அண்ணாவின் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்போம்!

ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் அமைப்போம்!”

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே