குறைந்தபட்ச ஆதாரவிலை குறித்து சட்டம் இயற்றுங்கள் – விவசாய சங்க தலைவர் கோரிக்கை..!!

குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய ஏதுவாக மத்திய அரசு புதிதாக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தால் அது விவசாயிகளுக்குப் பெரியளவில் நன்மையை தரும் என்றும் விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்குச் சர்வதேச பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவது தொடர்பாக இதுவரை மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே 11 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. 

இருப்பினும், இதில் உடன்பாடு ஏற்படவில்லை. விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு நிறுத்தவுள்ளதாகவும் அதை எதிர்த்தே விவசாயிகள் போராடுவதாகவும் தகவல் பரவியது.

ஆனால், இன்று நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி குறைந்தபட்ச ஆதார விலை எப்போதும் தொடரும் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட், “நாங்கள் எங்கும் குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிறுத்திக் கொள்கிறது என்று கூறவில்லை.

குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யச் சட்டம் ஒன்று வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. இதை உறுதி செய்யச் சட்டம் உருவாக்கப்பட்டால் இது விவசாயிகளுக்குப் பெரியளவில் நன்மையை தரும்.

இப்போது குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யச் சட்டம் எதுவும் இல்லை. இதன் காரணமாகவே வியாபாரிகளிடம் விவசாயிகள் ஏமாறுகின்றனர்.

எனவே, இதற்காக ஒரு சட்டத்தை அரசு உருவாக்க வேண்டும் என்றே நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, இன்று நாடாளுமன்றத்தில் பேசிய நரேந்திர மோடி, “குறைந்தபட்ச ஆதார விலை முன்பு இருந்தது. குறைந்தபட்ச ஆதார விலை இப்போதும் இருக்கும். குறைந்தபட்ச ஆதார விலை இனிமேலும் தொடரும்.

அதேபோல ஏழைகளுக்கு வழங்கும் இலவச ரேசன் திட்டமும் தொடரும். இந்த சட்டங்கள் நமது விவசாயிகளின் மண்டிகள் நவீனப்படுத்தப்படும்” என்றார்.

தொடர்ந்து விவசாயிகளின் நலனிற்காக பாஜக அரசு கொண்டுவந்துள்ள திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், “2014ஆம் ஆண்டுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விவசாய துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

விவசாய நிலங்களை இணைக்கும் பல சாலைகள் போடப்பட்டுள்ளது. அதேபோல விவசாயிகள் தங்கள் பொருட்களை எடுத்துச் செல்ல சிறப்பு ரயில்களும் விடப்பட்டுள்ளன.

இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது” என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே