இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – முதலமைச்சர் வலியுறுத்தல்

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை வந்த மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

மின்சார திருத்த மசோதாவில் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து அவர் ஆலோசித்தார்.

மின்சாரத்துறையின் சீர்த்திருத்தங்களை உள்ளடக்கிய புதிய மின் விநியோக திட்டங்கள் குறித்தும், பல்வேறு மின் திட்டங்கள் குறித்தும் முதலமைச்சருடன் மத்திய அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது என மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் முதலமைச்சர் வலியுறுத்தினார். 

அதேபோல், வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரத்தையும் ரத்து செய்யக் கூடாது என முதலமைச்சர் வலியுறுத்தினார்.

இது தொடர்பான கடிதத்தை மத்திய இணை அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் முதலமைச்சர் வழங்கினார்.

அப்போது, தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய இணை அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய கடிதத்தில், தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் கொண்டுவரப்பட்ட பல்வேறு மின்துறை திட்டங்களால் தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார்.

புதிய மின் உற்பத்தி நிலையங்களால் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 15 ஆயிரத்து 410 மெகாவாட் மின்சார உற்பத்தி கூடுதலாக கிடைக்கபெறுவதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர், தமிழகம் தொடர்ந்து மின்மிகை மாநிலமாக திகழ மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளிக்கவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

2020 ஆம் ஆண்டிற்கான மின்சார சட்டத்திருத்தம் தொடர்பாக தமிழக அரசு தனது நிலைபாட்டை தெரிவித்துள்ளதாகவும், அதன்படி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மினசாரம் ஆகியவற்றை எக்காரணத்தை கொண்டு நிறுத்துவதில்லை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதென குறிப்பிட்டுள்ளார்.

புதிய சட்டத்திருத்ததின் படி தனியாருக்கு வாய்ப்பு வழங்கும்பட்சத்தில் அவர்கள் லாப நோக்குடன் அணுகக்கூடுமென்பதால் மாநில மின்சாரத்துறைக்கு நஷ்டம் ஏற்படக்கூடமென சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிதி நெருக்கடியில் உள்ள மின் பகிர்மான கழகங்களுக்கு ஊரடங்கு கால நிதி உதவியாக 90 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கிய மத்திய அரசுக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

நிலக்கரி இந்தியா நிறுவனம் நேரடியாக நிலக்கரி வழங்க உத்தரவிடுவதன் மூலம் செலவினத்தை குறைக்கமுடியுமெனவும் தெரிவித்துள்ள முதலமைச்சர், ராய்கர் – திரிச்சூர் திட்டத்திற்கான தேவை தென்னிந்தியாவிற்கு தற்போது இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே