LATEST NEWS : ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை; மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றம் : ஏ.கே.விஸ்வநாதன்

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றபட்டுள்ளதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள ஐ.ஐ.டி.யில் வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் அதிக அளவில் தங்கி படித்து வருகிறார்கள்.

கேரள மாநிலம் கொல்லம் கிளிகொல்லூர் கிராமத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற 18 வயது மாணவியும் ஐ.ஐ.டி. வளாகத்தில் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

ஒன்றாக படிக்கும் பாத்திமா லத்தீப் ஐ.ஐ.டி. நுழைவு தேர்வில் சிறப்பான மாணவியாக தேர்வு பெற்று முதுகலை “மானிடவியல்” பாடத்தை எடுத்து படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி இரவு தனது விடுதி அறையிலேயே அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி பாத்திமா லத்தீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை நடத்தி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் மாணவி தற்கொலை விவகாரம் 5 நாட்களுக்கு பிறகு நேற்று ஒரே நாளில் விஸ்வரூபம் எடுத்தது.

முதலில் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதே மாணவியின் தற்கொலைக்கு காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், மாணவியின் இறுதிச் சடங்குக்கு பின்னர், அவரது செல்போனை ஆய்வு செய்த போது, தனது தற்கொலைக்கு இணை பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

மற்றுமொரு பதிவில் மேலும் 2 பேராசிரியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்த மாணவி, அவர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும் பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவுகள் தற்கொலைக்கு முந்தைய நாளான 8ம் தேதி பதிவிடப்பட்டிருந்தன.

இதனை அடுத்து மாணவியின் செல்போன் தடவியல் துறைக்கு அனுப்பட்டு அந்த பதிவுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, மாணவர் அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு இன்று சென்னை ஐஐடி முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற, இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 30 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

வழக்கு விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

மேலும் மாணவியின் செல்போன் பதிவைக் குறிப்பிட்டு, பிரதமர் அலுவலகத்துக்கும் அவரது பெற்றோர் நடவடிக்கை கோரி கடிதம் எழுதியுள்ளனர்.

மாணவியின் பெற்றோர் தமிழக முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும், நேரம் கிடைத்ததும் முதலமைச்சரை சந்தித்த பின்னர், தமிழக டிஜிபியிடம் எழுத்துப்பூர்வமாக புகாரளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், காவல் இணை ஆணையர் சுதாகர், மற்றும் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் சென்னை ஐஐடிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சிபிஐ-ல் பணியாற்றியவர் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்படும் என்றும், உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் விசாரணை நடைபெறும் என்றும் போலீஸ் அதிகாரி ஈஸ்வர மூர்த்தி தலைமையில் புலன் விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே