திருச்சியில், மகன் இறந்த அதிர்ச்சியை தாங்காமல், சிலிண்டரை திறந்து வெடிக்கவைத்து 2 மகள்களுடன் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த நவல்பட்டு பூலாங்குடி காலனியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 59). ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசிரியை.
இவரது கணவர் முருகேசன் ஏற்கெனவே இறந்து விட்டார்.
இவர்களது மகள்கள் விஜயலட்சுமி (28), விஜயவாணி (26), மகன் விஜயகுமார் (25).
இதில் டிப்ளமோ படித்து முடித்த விஜயகுமார் கடந்த 9 மாதத்துக்கு முன் விபத்தில் சிக்கி வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் விஜயகுமாரின் உடல்நிலை மோசமானதால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
மருத்துவ குழுவினர் வந்து பரிசோதித்ததில் விஜயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இந்த செய்தியை அருகில் உள்ளவர்களிடம் சொல்லாமல் மனதுக்குள்ளேயே வைத்து வேதனையில் இருந்த விஜயலட்சுமி குடும்பத்தினருடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
இதற்காக இரவு 7.30 மணிக்கு வீட்டில் உள்ள அறையில் விஜயகுமாரின் உடலை எடுத்து சென்றனர்.
அங்கு சமையல் காஸ் சிலிண்டரை திறந்து விட்டு மூவரும் சிலிண்டர் அருகே நின்று கொண்டு தீயை பற்ற வைத்தனர்.
தீ பற்றியவுடன் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் 3 பேரும் உடல் கருகி இறந்தனர்.
சிலிண்டர் வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கி இருந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி நவல்பட்டு காவல் நிலையத்தை நமது செய்தியாளர் முகம்மது சிக்கந்தர் தொடர்பு கொண்டு கேட்டபோது ‘நடந்த சம்பவம் சந்தேக மரணம் என்கிற அடிப்படையில் தான் விசாரணை நடப்பதாகவும் இது தற்கொலையா அல்லது கொலையா என்பது விசாரணை முடிவில் தான் தெரிய வரும்’ என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.