காணாமல் போனதாகக் கூறப்பட்ட திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா, சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து மீட்கப்பட்டார்.
தமிழ் சினிமாவின் பல முக்கிய படங்களில் பாடி பிரபலமானவர் பின்னணி பாடகி சுசித்ரா.
கடந்த சில மாதங்களுக்கு முன் இணையதளத்தில் சில சர்ச்சையான விசயங்கள் லீக்கானதாக சுச்சி லீக்ஸ் என மிகவும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து சுசித்ராவின் கணவரான யாரடி நீ மோகினி பட கார்த்திக் தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
இதையடுத்து அடையாறில் உள்ள வீட்டில் சுசித்ரா தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக சுசித்ராவை காணவில்லை என்று அவரது சகோதரியான சுனிதா ராமதுரை என்பவர் அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து புகாரை பெற்று கொண்டு வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்போன் எண்ணை வைத்து சுசித்ராவை தேடி வந்தனர்.
அவரது செல்போன் எண்ணின் இருப்பிடம் தியாகராயநகரில் உள்ள விடுதியை காட்டியது.
அந்த இடத்திற்கு சென்ற போலீசார் சுசித்ராவை மீட்டனர்.
அப்போது தனது சகோதரியை பார்த்து சுசித்ரா பலமாக சத்தமிட்டதாக கூறப்படுகிறது.
தனது குடும்பம் தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் வெளியுலகிற்கு காட்ட முயற்சிப்பதாகவும், தன்னை ஏதாவது செய்துவிடுவார்கள் என்று சுசித்ரா போலீசிடம் அச்சம் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து அவரை மீட்ட போலீசார், அவரது விருப்பப்படி கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் சுசித்ராவை அனுமதித்தனர்.