லலிதா ஜுவல்லரி நகைக் கொள்ளை – மேலும் ஒன்றரை கிலோ நகைகள் மீட்பு

திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் மேலும் ஒன்றரை கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சியில் உள்ள பிரபல லலிதா ஜூவல்லரி நகை கடையில் கடந்த 2ஆம் தேதி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த கொள்ளையில் ஈடுபட்ட முருகன் பெங்களூரு காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், கணேசன் திருச்சி காவல் நிலையத்தில் விசாரணை கைதியாக உள்ளார்.

மற்றொரு கொள்ளையரான சுரேஷிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

அவரது போலீஸ் காவல் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திருவேணி முன் சுரேஷ் ஆஜர் படுத்தப்பட்டார்.

அப்போது மீட்கப்பட்ட நகைகள் குறித்து காவல்துறையினர் கணக்கு காட்டினர்.

அதில் ஏற்கனவே சுரேஷிடம் இருந்து சுமார் நான்கரை கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கல்லணை சாலையில் அவர் புதைத்து வைத்திருந்த மேலும் ஒன்றரை கிலோ நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லலிதா ஜுவல்லரியில் மொத்தம் 28 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை சுமார் 25 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே