குரூப் 2 தேர்வு முறைகளில் மீண்டும் மாற்றம்

அரசு பணிக்கான குரூப் டூ பிரதான தேர்வு இனி இரு தாள்களாக நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழக அரசு பணிகளுக்கான குரூப்-2 தேர்வுக்கான திருத்தி அமைக்கப்பட்ட தேர்வு திட்டத்தின்படி எழுத்து தேர்வில் மொழிபெயர்த்தல் பகுதி மட்டும் முதல் தாளில் இடம்பெறும், பிற பகுதிகள் இரண்டாம் தாளில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள முதல்நிலைத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் இம்மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முதன்மை எழுத்துத் தேர்வின் முதல் பகுதி தனி தாளாக மாற்றப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 100 மதிப்பெண்களை கொண்ட இந்த தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் பெறவேண்டும்.

முதல் தாளில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றால் மட்டுமே இரண்டாம் தாள் மதிப்பீடு செய்யப்படும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இந்த தகுதி தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் தேர்வரின் ரேங்க் நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு குரூப்-2 தேர்வுகள், பட்டப்படிப்பில் இருந்து பத்தாம் வகுப்பு தரத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்த மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறமுடியும்.

இத்தேர்வில் வெற்றிபெற வேண்டுமென்றால் தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, இலக்கியம், மரபுகள், சமூக பொருளாதார வரலாறு, திருக்குறள் உள்ளிட்டவற்றை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்ற சூழல் உருவாக்கப்பட்டிருப்பதாக அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே