ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முதல்வர் பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை..!!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சாமி தரிசனம் செய்தார். தேர்தல் பிரச்சாரத்திற்காக திருச்சி மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் பழனிச்சாமி ஸ்ரீரங்கம் சென்றார். ரங்கநாதர் கோவிலில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டனர்.

கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என்று எதுவும் இல்லாமலேயே திமுக, அதிமுக கட்சியினர் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரப் பயணத்தை சேலத்தில் தொடங்கினார். சென்னையில் அதிமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில் மூன்று நாட்கள் நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

29ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த பழனிச்சாமி, அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வழிபட்டார். நேற்று முதல் திருச்சியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இன்று காலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சென்ற முதல்வர் பழனிச்சாமிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

கோவில் யானை ஆண்டாளுக்கு பழங்கள் கொடுத்து ஆசி பெற்ற முதல்வர் பழனிச்சாமி, ஸ்ரீரங்கநாதரை வழிபட்டார். தேர்தல் வெற்றிக்காக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும் மறைந்த முதல்வருமான ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அவ்வப்போது வந்து சாமி தரிசனம் செய்வார். ஆண்டாள் யானை என்றாலே ஜெயலலிதாவிற்கு ரொம்ப பிடிக்கும்.

ரங்கநாதர் கோவிலுக்கு ஜெயலலிதா வரும்போதெல்லாம் யானைக்குப் பிடித்தமான கரும்புகளை வாங்கி வந்து உண்ணக் கொடுத்து மகிழ்வார்.

பாகனுடன் பேசிக்கொண்டே நடந்து செல்லும் ஆண்டாள் யானை ஸ்ரீரங்கத்துவாசிகளுக்கு செல்லப்பிள்ளையாகும். முதல்வர்களுக்கும் செல்லப்பிள்ளையாகி விட்டது ஆண்டாள்.

எனவேதான் முதல்வர் பழனிச்சாமியும் இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க சென்ற போது பழங்களை கொடுத்து ஆசி பெற்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே