தமிழ்வழி மாணவர்கள் புறக்கணிப்பா? – டி.என்.பி.எஸ்.சி விளக்கம்..!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தி முடிக்கப்பட்ட 18 தொல்லியல் அலுவலர் பதவிகளுக்கு தேர்வில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது முற்றிலும் தவறான செய்தியாகும் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தொல்லியல் அலுவலர் பதவிகளுக்கு தேர்வுகள் 29.02.2020 அன்று நடத்தப்பட்டு 29.12.2020 அன்று தேர்வாணையத்தில் நடைபெற்ற கலந்தாய்வு மூலம் அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது.

இப்பதவிக்கு முதுகலை தமிழ், வரலாறு, தொல்லியல் படிப்புகள் மற்றும் தொல்லியலில் முதுகலை பட்டயப்படிப்புடன் இளங்கலையில் தமிழை ஒரு பாடமாக கட்டாயமாக படித்திருக்க வேண்டும் என்பது கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தேர்வு எழுதிய மாணவர்களின் கல்வித் தகுதி, இட ஒதுக்கீட்டு விதிகள், போட்டித் தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் தொடர்புடைய மூலச்சான்றிதழ்களைச் சரிபார்த்தல் அடிப்படையில் மட்டுமே இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு பெற்ற 18 மாணவர்களும் தமிழகத்தைச் சார்ந்தவர்கள்.

இதில் தமிழக அரசின் தொல்லியல் துறையில் முதுகலை பட்டப்படிப்பினை பெற்றுள்ள மாணவி ஒருவரும் உள்ளார்.

எனவே, பிற மாநிலத்தவருக்கு வாய்ப்பளிப்பதாகவும் தமிழக மாணவர்கள் புறக்கணிப்பதாகவும் வந்துள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை.

மேலும் அதில் ஒரு பணியிடம் அருந்ததியருக்காக ஒதுக்கப்பட்டு அப்பணியில் அருந்ததியர் பிரிவைச் சேர்ந்த மாணவர் ஒருவரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே