குலசேகரபட்டினம் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கொரோனா பாதிப்பு காரணமாக, பக்தர்கள் இன்றி கோயில் வளாகத்திலேயே நடைபெறவிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் கோலாகலமாக நடக்கும் தசரா திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது.

பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்மன் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி, தினமும் இரவில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

மைசூருக்கு அடுத்தபடியாக, இங்குதான் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து அம்மனை மனமுருக வழிபடுவார்கள்.

இந்நிலையில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறவுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு விழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ ஆரவாரத்துடன் நடக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சி, கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு கோயில் வளாகத்திலேயே நடைபெறவிருக்கிறது.

வரலாற்றில் முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திருவிழாவையொட்டி சுமார் 1,800 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குலசேகரபட்டினம் வருவதற்கான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி வழித்தடங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பக்தர்கள் அந்தந்த பகுதியிலேயே காப்புகளை கழற்றி, விரதத்தை முடித்துக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே