கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே போலீஸ் என்கவுன்டரில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
கடலூர் சுப்பராயலு நகரைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் வீரா என்ற வீராங்கையன் (28). கடலூர் உழவர் சந்தை அருகே பழக்கடை நடத்தி வந்தார்.
செவ்வாய்க்கிழமை இரவு வியாபாரத்தை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சுப்பராயலு நகர் அருகே சென்ற போது அவரை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து.
தப்பியோட முயன்றவரை விரட்டிச் சென்ற கும்பல் அவரை கொலை செய்து தலையை துண்டித்து தலையுடன் தப்பிச் சென்றனர்.
தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
கொலையான வீரா மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, முன்விரோதத்தில் கொலை நடந்ததா என்ற கோணத்தில் திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் விசாரித்து வந்தனர்.
இதற்கிடையில், கொலையானவர் தலையை சுமார் 200 மீட்டர் தூரத்தில், ஏற்கனவே வீரா சம்பந்தப்பட்ட கொலை வழக்கில் கொலையான சேகர் வீட்டின் முன்பு வைத்து விட்டு சென்றனர்.
எனவே, தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
நள்ளிரவில் சிலரை புதுப்பேட்டை பகுதியில் கைது செய்த நிலையில், மேலும் சிலர் பண்ருட்டி அருகே உள்ள குடுமியான்குப்பத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் போலீஸார் அங்கு சென்ற போது கிருஷ்ணன் என்பவர் போலீஸாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்ற போது போலீஸார் அவரை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கிருஷ்ணாவின் உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கிருஷ்ணாவிற்கும் வீராவிற்கும் இருந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.