இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைப்பு பணிகள் முடிந்தது..!!

இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கியை இணைக்கும் தகவல் தொழில்நுட்பப் பணிகள் அனைத்தும் அனைத்துக் கிளைகளிலும் முடிந்துவிட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 பொதுத் துறை வங்கிகளை நான்கு பொதுத் துறை வங்கிகளாக இணைக்க மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியது.

அதன்படி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆப் இண்டியா ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும் இணைந்தன.

சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டது.

ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆப் இண்டியாவுடன் இணைந்தன.

அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 4ம் தேதியில் இருந்து இந்த இணைப்பு அமலுக்கு வந்தது. 

ஆனாலும், இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கியின் தொழில்நுட்பங்கள் மட்டும் கரோனா காரணமாக இணைக்கப்படாமல் இருந்தது.

இதையடுத்து கடந்த 12ம் தேதி முதல் 15-ம் தேதிவரை அலகாபாத், இந்தியன் வங்கி தொழில்நுட்ப பணிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டன.

முந்தைய அலகாபாத் ஆன்லைன் இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் செயலி கடந்த 12ம் தேதி முதல் செயலிழந்தது.

அலகாபாத் பொதுத்துறை வங்கி முழுமையாக இந்தியன் வங்கியுடன் ஒருங்கிணைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்தியன் வங்கி மேலாண் இயக்குநர் பத்மஜா சந்துரு வெளியிட்ட அறிவிப்பில், ‘ அலகாபாத் வங்கியை இந்தியன் வங்கியுடன் ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பப் பணிகள் கடந்த 13, 14, 15-ம் தேதிகள் அனைத்துக் கிளைகளிலும் நடந்து முடிந்துள்ளன.

அனைத்துக் கிளைகளிலும் வாடிக்கைகயாளர்கள் பயன்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் தயாராகிவிட்டன. புராஜெக்ட் சங்கம் திட்டத்தின் இறுதிக்கட்டமாக இருந்தது.

மத்திய அரசு அறிவித்தஉடனே வங்கிஇணைப்புப் பணிகளைத் தொடங்கினோம். ஆனால், கரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு சவால்களைச் சந்தித்தோம்.

ஆனாலும், எங்கள் வங்கிக் குழுவினரின், ஊழியர்களின் தீர்மானம், உறுதியான நடவடிக்கையால் வெற்றிகரமாக முடிந்துள்ளது

இரு வங்கிகளிலும் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கு எண் எந்தவிதத்திலும் மாறாது.

இணையதளத்தில் வங்கிக்கணக்கை இயக்கும் போது, பாஸ்வேர்ட், லாக்கின் போன்றவையும் வழக்கம்போல் பயன்படுத்தலாம்.

அலகாபாத் வங்கி வாடிக்கையாளர்கள் இனி, இன்டோஅசிஸ் என்ற இந்தியன்வங்கி மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் பயன்படுத்தலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே