காரைக்கால் : சிறுவன் கொலை வழக்கில் புதிய திருப்பம்..!!

‘குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து எங்கள் மகனை கொலை செய்த பெண்ணை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்; இல்லா விட்டால் தற்கொலை செய்து கொள்வோம்’ என, பெற்றோர் கூறினர்.

குளூக்கோஸ்

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில், குளிர்பானத்தில், ‘எலி பேஸ்ட்’ கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவரின் பெற்றோர் ராஜேந்திரன் மாலதி நேற்று கண்ணீர் மல்க கூறியதாவது: எங்கள் மகன் பாலமணிகண்டன், 13, மயங்கிய நிலையில் இருந்தான். உடனே அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் காண்பித்தோம். மருத்துவர்கள் வாந்தி நிற்பதற்கு மாத்திரை கொடுத்து வீட்டிற்கு அனுப்பினர்.

பள்ளி நிர்வாகத்தினர் மாணவனின் உடல் நிலையை கருத்தில் கொள்ளாமல், விழா ஏற்பாட்டில் குறியாக இருந்தனர். மகன் உடல்நிலை மிகவும் மோசமானதால் மீண்டும் அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். காலாவதியான குளிர்பானம் குடித்ததால் தான் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறி, குளூக்கோஸ் மட்டும் ஏற்றினர். சிறுவனுக்கு எந்த பாதிப்பும் இல்லை என, கூறினர். சிறுவன் என்ன விஷம் உட்கொண்டான் என விசாரித்து, காவல்துறை தரப்பில் சொன்னால் தான் அதற்குரிய சிகிச்சை அளிக்க முடியும் என்றனர்.

பூச்சி மருந்து

போலீசார் விசாரணையில் சகாயராணி விக்டோரியா பூச்சி மருந்து கொடுத்ததாக கூறியுள்ளார். இப்படி காவல் துறையும், மருத்துவர்களும் காலம் கடத்தியதால் தான் எங்கள் மகனை இழந்து விட்டோம். எங்கள் மகனுக்கு ஏற்பட்ட நிலைமை, வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது. விஷம் கொடுத்து கொலை செய்த விக்டோரியா சகாயராணியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பால மணிகண்டன் மரணத்தில் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, சுகாதாரத் துறை மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே