சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமனம்..!!

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து டேவிட் வார்னர் நீக்கப்பட்டு, கேன் வில்லியம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் சிஎஸ்கேவிடம் தோல்வியடைந்தது சன்ரைசர்ஸ் அணி. கடந்த ஆறு ஆட்டங்களில் ஐந்தில் தோல்வியடைந்துள்ளது. இதனால் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக 2015-ம் வருடம் நியமிக்கப்பட்டார் டேவிட் வார்னர். அந்த வருடம் சன்ரைசர்ஸ் அணி 6-ம் இடத்தையே பிடித்தது. எனினும் அடுத்த வருடம் சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வார்னர் தலைமையில் வென்றது. 2017-ல் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்ட டேவிட் வார்னர், 2018 ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை. அப்போது கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன், அந்த வருடம் அணியை இறுதிச்சுற்று வரை கொண்டு சென்றார். 2019-ம் ஆண்டும் சன்ரைசர்ஸ் கேப்டனாக இருந்தார் வில்லியம்சன். அவருக்குக் காயம் ஏற்பட்டபோது புவனேஸ்வர் குமார் 6 ஆட்டங்களில் கேப்டனாகச் செயல்பட்டார். கடந்த வருடம் கேப்டன் பதவி மீண்டும் வார்னருக்கே வழங்கப்பட்டது. பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்று 3-ம் இடம் பிடித்தது வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி. எனினும் இந்த வருடம் மோசமாக அமைந்துவிட்டது. கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டதால் பாதி போட்டி முடிவதற்குள் வார்னர் நீக்கப்பட்டு கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் கேப்டனாக டேவிட் வார்னர்

2015 – 6-ம் இடம்
2016 – ஐபிஎல் சாம்பியன்
2017 – 4-ம் இடம்
2020 – 3-ம் இடம்

ஐபிஎல் போட்டியில் 26 ஆட்டங்களுக்குத் தலைமை தாங்கியுள்ளார் கேன் வில்லியம்சன். அதில் 14 வெற்றிகளையும் 12 தோல்விகளையும் அடைந்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே