உதட்டுச் சேவை செய்யும் கமல்: வானதி சீனிவாசன் விமர்சனம்

உதட்டளவில் சேவை செய்யக் கூடியவர் கமல்ஹாசன் என்று கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் வானதியைத் துக்கடா அரசியல்வாதி என்று கூறியிருந்த நிலையில், வானதி சீனிவாசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து அண்மையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ”மக்களுடைய பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள், ஆட்சி நிர்வாகம் பற்றிய புரிதல் தொடர்பாக வானதி சீனிவாசனுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விவாதம் செய்யத் தயாரா?” என்று சவால் விடுத்தார்.

இதற்கு பதிலளித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கே.குமாரவேல் வெளியிட்ட அறிக்கையில், ”முதலில், பிரதமர் மோடியுடன் விவாதம் செய்ய கமல் விரும்புகிறார். அதையடுத்து, நிதியமைச்சர் நிர்மலா, அடுத்தடுத்து பாஜக அமைச்சரவையினர் ஒவ்வொருவருடனும் விவாதம் செய்துவிட்டுக் கடைசியாக துக்கடா தலைவர் வானதி சீனிவாசனுடன் விவாதத்தை வைத்துக்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் வானதி சீனிவாசன், ”ஒவ்வொரு பெண்ணும் கஷ்டப்பட்டுதான் வாழ்க்கையில் முன்னேறி வருகிறார்கள். இப்படி முன்னேறி பொது வாழ்க்கைக்கு வரும் பெண்களுக்கு இவர்கள் வைக்கும் விமர்சனம் இதுதான் என்று கூறினால், பெண்களை இவர்கள் காப்பாற்றுவார்களா? பெண்கள் நலனில் அக்கறை செலுத்துவார்களா?, மக்கள் நீதி மய்யமும், கமலும் இதற்கு பதில் சொல்லட்டும்” என்று கூறியிருந்தார்.

இதற்குக் கமல் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படாத நிலையில், உதட்டளவில் மட்டுமே சேவை செய்யக் கூடியவர் கமல்ஹாசன் என்று வானதி விமர்சித்துள்ளார்.

51-வது வார்டுக்கு உட்பட்ட சொர்ணாம்பிகை லே-அவுட் பகுதி மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களில் நேற்று வானதி சீனிவாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் பேசும்போது, ”என்னைப் பார்த்து துக்கடா அரசியல்வாதி என்கிறார். நான் அந்த நடிகரிடம் கேட்கிறேன். இத்தனை நாள் உதட்டுச் சேவை மட்டும்தான் செய்தீர்கள். அப்படி என்றால் என்ன?

அவருக்கு இரண்டு அர்த்தத்திலுமே உதட்டுச் சேவையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். ஒன்று உதட்டளவில் சேவை செய்வது, இன்னொன்று உதட்டுக்குச் சேவை செய்வது. இதைச் செய்யும் நீங்கள் என்னைப் பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று சொல்லலாமா?” என்று வானதி பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே