சர்ச்சைப் பேச்சு; ராதாரவிக்கு ஒரு நியாயம்; ஆ.ராசாவுக்கு ஒரு நியாயமா? – அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

ராதாரவிக்கு ஒரு நியாயம், ஆ.ராசாவுக்கு ஒரு நியாயமா என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து சமீபத்தில் மக்களவை திமுக உறுப்பினர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் அரசியல் வளர்ச்சியை ஒப்பீடு செய்து ஆ.ராசா பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

திமுகவினர் கண்ணியமான முறையில் பிரச்சாரங்களின்போது பேச வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

சென்னை, திருவொற்றியூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, தனது தாயாரை இழிவாகப் பேசியதாகக் குறிப்பிட்டு கண்கலங்கினார். ஆ.ராசாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், முதல்வரின் அம்மாவைப் பற்றிப் பேசியது தவறாகக் கொண்டு செல்லப்படுவதால் வருத்தம் தெரிவிக்கிறேன். முதல்வர் கண்கலங்கியதைப் பார்த்தேன். அதற்காக முதல்வரிடம் மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன் என ஆ.ராசா தெரிவித்தார்.

இந்நிலையில், பெண்கள் குறித்து தரமற்ற முறையில் பேசியதாக திமுகவிலிருந்து நீக்கப்பட்டு தற்போது பாஜகவில் உள்ள ராதாரவி, தனக்கு ஒரு நியாயம், ஆ.ராசாவுக்கு ஒரு நியாயமா எனக் கேள்வி எழுப்பினார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு ‘கொலையுதிர் காலம்’ பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்ததால், அவர் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். பிறகு ராதாரவி பாஜகவில் இணைந்தது நினைவுகூரத்தக்கது.

இந்நிலையில் ஆ.ராசா விவகாரம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார், சென்னை, மூலக்கொத்தளத்தில் இன்று (மார்ச் 31) செய்தியாளர்களிடம் பேசுகையில், ”திமுகவுக்கு எதிராகத் திரும்பியிருப்பதால்தான் இன்றைக்கு உடனடியாகத் தன் பேச்சுக்காக ஆ.ராசா மன்னிப்பு கேட்கின்றார். அவர்கள் கட்சியில் எல்லோரும் அப்படித்தான். நிலச்சுவான்தாரர், பண்ணையார், ஜமீன்தார் போன்றுதான் அவர்கள் அரசியல் நடத்துகின்றனர். மக்கள் அரசியலை திமுக செய்யவில்லை.

ராதாரவிக்கு ஒரு நியாயம், ஆ.ராசாவுக்கு ஒரு நியாயமா? ஆ.ராசா மீது நடவடிக்கை எடுத்தால்தான் திமுக மீது மக்களுக்கு நல்ல கருத்து இருக்கும். ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், திமுக சொல்லித்தான் ஆ.ராசா பேசினார் என்ற கருத்து இருக்கும்.

தான் பேசியதைத் திரித்து சமூக வலைதளங்களில் உலாவிட்டிருந்தால் ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லையே? அப்போது பேசியது உண்மைதானே” என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே