கரூர் நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் ஜோதிமணி எம்.பி உள்ளிருப்பு போராட்டம்!

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியின் கீழ் புதிய பணிகளை துவக்குவதற்கு கரூர் நகராட்சி ஆணையாளர் சுதா முட்டுக்கட்டை போடுவதாக கரூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று கரூர் எம்பி ஜோதிமணி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய கரூர் எம்பி ஜோதிமணி :

கரூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நிதியின் கீழ் கரூர் மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இச்சூழ்நிலையில் கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர் நகராட்சி ஜமீலா தெரு உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை துவக்குவதற்கான கரூர் நகராட்சி ஆணையாளர் சுதா அவர்களிடம் ஒப்புதல் கோரப்பட்டது.

ஆனால் மார்ச் மாதம் முதல் கடந்த மூன்று மாதங்களாக பணிகள் துவங்குவதற்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்காமல் முட்டுக்கட்டை போட்டு வருவதால் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் ஒப்புதல் வழங்கும்வரை தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன். நான்கு நாட்கள் ஆனாலும் நகராட்சி அலுவலகத்தை விட்டு வெளியேற மாட்டேன் என தெரிவித்தார்.

இதே போல ஆண்டான்கோயில் கீழ்பாகம் பகுதியில் கழிப்பிடம் கட்டுவதற்காக இடத்தை தேர்வு செய்யக்கோரி ஊராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு அந்த பகுதியின் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரின் சகோதரர், இப்பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் வாய்க்கால் வாரி புறம்போக்கு என ஆட்சேபணை தெரிவித்து எனக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே இவ்விரு சம்பவங்களுக்குப் பின்னால் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் இருக்கிறாரா என்ற ஐயம் எழுந்துள்ளது என்று கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்தார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே