டெல்லியில் ராகுல் காந்தியுடன் ராஜஸ்தான் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் சந்திப்பு மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கெலாட் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதை அடுத்து, சச்சின் பைலட் துணை முதல்வர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. காங்கிரஸ் ஆட்சி அமைந்ததிலிருந்தே, முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வந்தது. இந்த மோதல்போக்கு சமீபத்தில் உச்சகட்டத்தை எட்டியது. சச்சின் பைலட் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் தனியே முகாமிட்டார்.
அதனையடுத்து, முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை. அதனையடுத்து, சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும், சச்சின் பைலட்டையும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
அதனை எதிர்த்து சச்சின் பைலட், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்தநிலையில், ஆகஸ்ட் 14-ம் தேதி ராஜஸ்தான் சட்டமன்றம் கூடவுள்ளது. அப்போது, அசோக் கெலாட் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்தநிலையில், ராகுல் காந்தியையும், பிரியங்கா காந்தியையும் சச்சின் பைலட் இன்று சந்தித்து பேசவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.