குடியுரிமைச் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தி.மு.க. இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை சைதாப்பேட்டையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்காக சைதாப்பேட்டை பஜார் சாலையில் இருந்து ஏராளமான இளைஞரணியினர் கொடி ஏந்தி ஊர்வலமாக புறப்பட்டனர். உதயநிதி ஸ்டாலினும் இந்த பேரணியில் நடந்து சென்றார்.

அவருடன் அன்பகம்கலை, ஜின்னா, வி.எஸ்.ராஜ், மாவட்ட அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, சிற்றரசு உள்பட ஏராளமான இளைஞரணி நிர்வாகிகள் கண்டன முழக்கம் எழுப்பியபடி நடந்து சென்றனர்.

சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே பேரணி சென்றதும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மேடையில் ஏறி அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு அளித்த எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கமிட்டனர். பின்னர் மேடையில் குடியுரிமை சட்ட திருத்த நகலை கிழித்து எறிந்தனர்.

அதன்பிறகு மேடையை விட்டு இறங்கி உதயநிதி ஸ்டாலின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டார்.

அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான இளைஞர் அணியினரையும் போலீசார் கைது செய்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே