மாகராஷ்டிரா மாநிலத்தின் வனத்துறை அமைச்சர் சஞ்சய் ரத்தோட் ராஜினாமா செய்துள்ள சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாகராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண்ணின் மரணத்தில் சஞ்சய் ரத்தோட் சம்பந்தப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம் சாட்டியிருந்ததைத் தொடர்ந்து இன்று ரத்தோட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

23 வயதான பூஜா சௌவான் தனது சகோதரனுடன் ஆங்கிலம் பயிற்சி வகுப்பிற்காக புனேவில் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த 8ம் தேதி பூஜா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து காவல்துறையினர் தற்கொலையா என்கிற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த உயிரிழப்பு சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் சர்ச்சைக்குரிய ஆடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது.

அதில் பூஜாவின் மரணம் குறித்து பேசப்பட்டிருந்தன.

இந்த ஆடியோவில் இருக்கும் இரு வேறுபட்ட குரல்களில் ஒன்று வனத்துறை அமைச்சர் சஞ்சய் ரத்தோட்டினுடையது என பாஜக குற்றம்சாட்டியிருந்தது.

மேலும், ரத்தோட்டிற்கு எதிராக போராட்டக்களத்திலும் குதித்தது. அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்திருந்தது.

இதன் காரணமாக அவர் ராஜினாமா செய்துள்ளார்.

ஆனால், அமைச்சர் இந்த குற்றச்சாட்டினை முற்றிலுமாக மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா இடையே பெரும் சலசலப்பு நிலவி வரும் நிலையில், தற்போது இச்சம்பவம் அம்மாநில அரசியல் தளத்தில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே