அயோத்தி நிலம் குறித்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் முடிவடைந்துவிட்ட நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடமான 2.77 ஏக்கர் நிலத்திற்கு உரிமை கோரி தொடுக்கப்பட்ட வழக்கில், சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோகி அஹாரா, ராம்லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.
40 நாட்களாக நாள் தோறும் நடைபெற்று வந்த விசாரணையை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.
மாலை 5 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறிய நிலையில், இறுதி நாளில் அனைத்து தரப்பினரும் தங்கள் இறுதி வாதங்களை எடுத்துரைத்தனர்.
ராம ஜென்மபூமி என்பது ஒன்றே ஒன்றுதான் என்றும், அது அயோத்தியில் இருக்கக்கூடியதான் என இந்து அமைப்புகள் தரப்பில் இறுதிவாதம் முன் வைக்கப்பட்டது.
இஸ்லாமியர்கள் வேறு எங்கு வேண்டுமானாலும் வழிபடலாம் என்றும் ஆனால் தாங்கள் ராம ஜென்ம பூமியில் மட்டுமே வழிபட முடியும் என்றும் தெரிவித்தனர்.
பாபர் அயோத்தியாவிற்கு வந்ததற்கான ஆதாரம் இல்லாத நிலையில் அவர் எப்படி மசூதியை கட்டி இருக்க முடியும் என்று ஹிந்து மகாசபை தரப்பில் வாதம் எடுத்துரைக்கப்பட்டது.
இந்து அமைப்பினர் இன் வாதம் நிறைவு பெற்றதை அடுத்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழு தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகள் அடங்கிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்தச் சூழ்நிலையில் அயோத்தி வழக்கில் இந்து அமைப்புகள் தாக்கல் செய்த புத்தகத்தை இஸ்லாமியத் தரப்பு வழக்கறிஞர் ராஜீவ் தவான் எதிர்ப்பு தெரிவித்து கிழித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் நீதிமன்றத்தை அவமதிக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என கண்டிப்புடன் கூறினார். இல்லை என்றால் தாங்கள் எழுந்து சென்று விடுவதாகவும் தெரிவித்தனர்.
ராமர் கோவில் இருந்ததாக சொல்லக்கூடிய இடத்தில் இராமர் பிறந்தார் என இந்து அமைப்புகள் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று இஸ்லாமிய அமைப்புகள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
பாபர் மசூதி இருந்ததற்கான ஆதாரங்கள் முழுமையாக இருக்கின்றன என்றும் கூறினர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.